Times of Puducherry
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றபோது பொன்னாடை வழங்கி வரவேற்ற, கோயில் அறங்காவலர் குழு தலைவரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி அம்மையாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் முதலமைச்சர் விஜய்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இன்று திங்கள்கிழமை காலை தொடங்கி வைத்தார். மதியம் அவுட்போஸ்டில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் விஜய் மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் விஜய்
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். கோரிப்பாளையம், நெல்பேட்டை, கீழவாசல், விளக்குத்தூண், ஜடாமுனி கோவில் தெரு வழியாக மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு நுழைவு வாயிலை அடைந்தார் அதனை தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்த முதலமைச்சர் விஜய்க்கு அறங்காவலர் குழுத் தலைவரும், தி.மு.க முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி அம்மாள் வரவேற்பு அளித்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய் பொற்றாமரை குளம், அம்மன், சுவாமி சன்னதி பிரகாரங்கள், புதிதாக புனரமைக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் அம்மனுக்கு 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு பூஜையின்போதும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு பூஜையிலும் தரிசனம் செய்யும்போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மாலையில் கோவிலுக்கு வந்த முதலமைச்சர் விஜய் 4.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தார். இந்த பூஜையின்போது பஞ்ச தசி வடிவத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பார். அப்போது அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மன், சுவாமி சொக்கநாதர் சன்னதிகளில் முதலமைச்சர் விஜய் வழிபட்டார். கோவிலுக்கு வந்த அவருக்கு அண்மையில் புதிதாக அசாமில் இருந்து வாங்கி வந்த துர்கா என்ற யானை மூலம் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சருடன் புஸ்சி ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார், ரமேஷ் உடன் சென்றனர்.முதல்மைச்சர் விஜய் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு இருந்து ஆர்ப்பரித்தனர். விஜய் வருகையால் மதுரை நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டது.
ஆசி பெற்ற விஜய்
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றபோது பொன்னாடை வழங்கி வரவேற்ற, கோயில் அறங்காவலர் குழு தலைவரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி அம்மையாரின் காலில் விழுந்து முதலமைச்சர் விஜய் ஆசி பெற்றார்.
முன்னதாக, மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி நடந்தது. இதற்கான அழைப்பிதழில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, அறங்காவலர் குழு தலைவரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன், பக்தர்களின் பாதுகாப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த சூழலில், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரான முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன், தமிழக முதல்வர் விஜய்க்கு பொன்னாடை வழங்கி வரவேற்றார். அப்போது, முதல்வர் விஜய்யும் ருக்மணி அம்மையாருக்கு பொன்னாடை வழங்கி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இந்த நிலையில், வெவ்வேறு அரசியல் தளங்களில் இயங்கினாலும், தமிழகத்தின் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த தலைவரின் தாயாரை நேரில் சந்தித்து விஜய் ஆசீர்வாதம் பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.