Times of Puducherry
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அறிவித்தது. அவ்வகையில், இந்த திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்வர் முடிவு செய்தார். அதன்படி, 22.6.2026 அன்று முதல் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக, தமிழகம் முழுவதும் 107 மருத்துவமனைளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
முதல் தவணையாக இதற்காக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) நேரடியாக வந்து தொடங்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். மோதிரம் அணிவித்தபோது தாய்மார்கள் தங்களது குழந்தைகளை முதலமைச்சரின் கையில் கொடுத்து அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். குழந்தைகளை தூக்கி கொஞ்சியபடி முதலமைச்சரும் அன்புடன் அவர்களுக்கு மோதிரம் அணிவித்தார்.
தங்க மோதிரம் திட்டமானது, அடுத்த 40 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை என இரு வேளைகளில் வழங்கப்படும் எனவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் காலை 25, பிற்பகல் 25 என மொத்தம் 50 பயனாளிகளுக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 28-ஆம் தேதிக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரசவம் நடைபெறும் அரசு மருத்துவமனைகளிலேயே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ், தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவித்தல், தாய்மையையும் குழந்தைப் பிறப்பையும் கொண்டாடுதல், அரசு சுகாதார சேவைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துதல் போன்றவைதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் முதலமைச்சர் விஜய் சென்று வழிபாடு செய்யவுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.