Times of Puducherry

உயிரைப் பணயம் வைத்து குட்கா கடத்தலைத் தடுத்த போலீஸ்: நேரில் அழைத்துப் பாராட்டிய விஜய்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
29 Sep 2026 • 5:40 PM
TN CM vijay congratulated kovilpalayam police station head constable velmurugan

கோவையில் உயிரைப் பணயம் வைத்து 40 கி.மீ காரில் பயணித்து குட்கா கடத்தலைத் தடுத்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டிய சம்பவம் இணைய வாசிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாகக் குட்கா பொருட்களைக் கடத்திச் சென்ற காரைப் பிடிக்கக் காவல்துறையினர் முயன்றனர். அப்போது, தப்பியோட முயன்ற காரின் மேற்கூரையில் தலைமைக் காவலர் வேல்முருகன் தனது உயிரைப் பணயம் வைத்து ஏறி படுத்து, சமயோசிதமாகச் செயல்பட்டார்.

கோவை -அவிநாசி பைபாஸ் சாலையில் அவிநாசி வரை சுமார் 40 கி.மீ தூரம் அவர் காருடன் பயணித்த நிலையில், காவல்துறையினரின் ஒருங்கிணைந்த தீவிர நடவடிக்கையால் அந்த வாகனம் அவிநாசி அருகே மடக்கிப் பிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 233 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்தனர்.

தலைமைக் காவலர் வேல்முருகனின் இந்த ஒப்பற்ற வீரதீரச் செயல், கடமை உணர்வு மற்றும் சமயோசித புத்தியை பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டினர். இந்த நிலையில், கோவையில் உயிரைப் பணயம் வைத்து 40 கி.மீ காரில் பயணித்து குட்கா கடத்தலைத் தடுத்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

இதேபோல், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (DGP) மகேஷ் குமார் அகர்வாலும் தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் சந்தித்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆபத்தான சூழலிலும் துணிச்சலுடன் செயல்பட்ட தலைமைக் காவலரின் இச்செயல் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. அவரை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி இருப்பது தற்போது இணைய வாசிகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top