Times of Puducherry

கழிவறை தண்ணீரை குளுக்கோஸ் பாட்டிலில் கலந்த அவலம்.! திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
24 Sep 2026 • 2:23 PM
tiruvallur govt hospital sanitation worker pours toilet water into glucose bottl

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு, கழிவறை தண்ணீரைப் பிடித்து வந்து குளுக்கோஸ் பாட்டிலில் தூய்மை பணியாளர் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் குடும்பத்தகராறு காரணமாக நேற்று இரவு வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூக்கு வழியாக டியூப் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

எலி மருந்து சாப்பிட்ட நபருக்கு நச்சுக்களை வெளியேற்றுவதற்காக மூக்கின் வழியாக சலைன் நீரை ஏற்றுமாறு மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு செலுத்தப்பட வேண்டிய சோடியம் குளோரைடு கரைசலுக்கு (சலைன் நீர்) பதிலாக மருத்துவமனை கழிவறையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லோகேஷின் நண்பர்கள், இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த லோகேஷ், கழிவறை தண்ணீர் ஊற்றப்பட்டதாக கூறப்படும் குளுக்கோஸ் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் பணியில் இருந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்ட லோகேஷ், சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவரை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குளுக்கோஸ் பாட்டிலில் தண்ணீரைப் பிடித்து நிரப்பிய தூய்மை பணியாளரிடம் இது குறித்து கேட்டபோது, “லோகேஷை கவனித்துக் கொண்ட செவிலியர் தான் தண்ணீர் ஊற்றச் சொன்னார். அதனால்தான் தண்ணீர் ஊற்றினேன்” என்று விளக்கம் அளித்தார். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர் முனிரத்தினம், சம்பவத்தில் தொடர்புடைய தூய்மை பணியாளர், செவிலியர் ஆகியோர் மீது விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் உத்தரவின் பெயரில் தற்போது சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளரை நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அனுமதித்தது யார் என்பது குறித்தும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்தும், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட சுகாதாரப் பணியாளர் மருத்துவமனை தலைவரின் உத்தரவின் பெயரில் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top