Times of Puducherry

தமிழகத்தையே அதிர வைத்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மனிதர்களை காக்கை குருவி போல் சுட்ட காவலர் மரணம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 6:47 PM
Thoothukudi sterlite firing cop A Raja dies of illness 2026

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடைபெற்றது. மே 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தனர். அப்போது கலவரம் ஏற்பட்ட நிலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு காவலர் மஞ்சள் நிற உடையில், போலீஸ் வேன் மீது ஏறி போராட்டக்காரர்களை நோக்கி சுடும் புகைப்படம் இணையத்தில் இன்றும் வைரலாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வேன் மீது ஏறி துப்பாக்கி சூடு நடத்தியவர் காவலர் ராஜா என்பவர். இந்த துப்பாக்கிச் சூடுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் அரசியல் பிரமுகர்களும் கட்டும் எதிர்ப்பலைகளை வீசினர்.

அப்போதைய அதிமுக அரசு அந்த காவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. மேலும், கடந்த திமுக ஆட்சியில் அந்த காவலர் ராஜாவுக்கு பதவி உயர்வும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில்தான், தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர் ராஜா தற்போது உயிரிழந்துள்ளார்.

ராஜாவுக்கு வயது 46, கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனையில் அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top