Times of Puducherry
வீட்டில் தினமும் 24 மணி நேரமும் இடைவிடாமல் இயங்கும் ஒரே மின்சாதனம் குளிர்சாதனப் பெட்டி தான். “ப்ரிட்ஜ் போய் வெடிக்குமா?” என்று பலரும் இதைச் அலட்சியமாக நினைக்கலாம். ஆனால், அதில் உள்ள கம்ப்ரஸர், மின் இணைப்புகள் மற்றும் குளிர்பதன வாயுவில் ஏற்படும் சிறு தவறுகள் மாபெரும் தீ விபத்துக்கோ அல்லது வெடிப்புகளுக்கோ வழிவகுக்கும் என்பதுதான் கசப்பான உண்மை.
குறிப்பாக, தற்கால நவீன ப்ரிட்ஜ்களில் R600a (Isobutane) என்ற எளிதில் தீப்பற்றக்கூடிய குளிர்பதன வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பில் கசிவு ஏற்பட்டு, சிறிய மின் தீப்பொறி பட்டால் கூட ஆபத்து பல மடங்கு அதிகமாகும். ப்ரிட்ஜைப் பயன்படுத்தும்போது நாம் தவிர்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பனியைச் சுரண்ட கத்தியைப் பயன்படுத்தாதீர்கள்
ஃப்ரீசரில் அதிகளவில் பனிக்கட்டி படிந்திருக்கும் போது, அதை விரைவாக அகற்றுவதற்காகப் பலர் கத்தி, ஸ்க்ரூ டிரைவர் போன்ற கூர்மையான பொருட்களை வைத்துப் பனியை உடைப்பார்கள். தவறுதலாக கூர்மையான முனை குளிரூட்டும் குழாயில் பட்டால், உள்ளே இருக்கும் R600a வாயு உடனடியாக வெளியேறும்.இதற்கு பதிலாக டிஃப்ராஸ்ட் (Defrost) பொத்தானைப் பயன்படுத்தியோ அல்லது மின்சாரத்தைத் துண்டித்தோ பனியை இயற்கையாக உருக விட வேண்டும்.
சேதமடைந்த வயர் & மல்டிபிளக் பயன்பாடு
வயரில் பிளவு, உருகிய பிளாஸ்டிக் வாடை அல்லது கருகிய தடயம் இருந்தால் உடனே அதை மாற்ற வேண்டும். நீங்களாக டேப் சுற்றிப் பயன்படுத்துவது ஆபத்தானது. ப்ரிட்ஜ் இயங்கும் அதே சாக்கெட்டில் மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் போன்ற அதிக மின்சாரம் உறிஞ்சும் சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்கக் கூடாது. இது அதிக வெப்பத்தை உருவாக்கி சாக்கெட்டைத் தீப்பிடிக்க வைக்கும். ப்ரிட்ஜிற்கு எப்போதும் தனி சுவரில் உள்ள உயர்தர சாக்கெட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கேஸ் கசிவு சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
ப்ரிட்ஜில் இருந்து வாயு கசிவது போன்ற வாடை வந்தாலோ அல்லது குளிரூட்டும் பகுதி சேதமடைந்தாலோ அருகில் தீப்பெட்டி, லைட்டர் கொளுத்துவதையோ, சுவிட்சுகளை ஆன்/ ஆஃப் செய்வதையோ உடனடியாகத் தவிர்க்கவும். அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து காற்றோட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். நீங்களே சரி செய்ய முயற்சிக்காமல் தகுதியான சேவை நிபுணரை (Service Engineer) அழைக்க வேண்டும்.
சுவரோடு ஒட்டி வைக்காதீர்கள்
ப்ரிட்ஜின் பின்புறம் இருக்கும் கம்ப்ரஸர் இயங்கும்போது அதிக வெப்பத்தை வெளியிடும். ப்ரிட்ஜைச் சுவரோடு மிக நெருக்கமாக வைத்தால் வெப்பம் வெளியேற முடியாமல் காற்றோட்டம் தடைபடும். இது கம்ப்ரஸரின் செயல்பாட்டைப் பாதித்து அதிக வெப்பமடையச் செய்யும். தயாரிப்பாளர் குறிப்பிட்ட இடைவெளியைச் சுவருக்கும் ப்ரிட்ஜிற்கும் இடையே விட்டு வைப்பது அவசியம்.
உடனே கவனிக்க வேண்டிய 6 எச்சரிக்கை அறிகுறிகள்
உங்கள் ப்ரிட்ஜில் பின்வரும் அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே மின்சாரத் தொடர்பைத் துண்டித்துச் சோதிக்க வேண்டும்
பிளக் அல்லது சாக்கெட் தொடும்போது அதிக சூடாக இருப்பது.
ஒயரிங் அல்லது பிளாஸ்டிக் எரியும் துர்நாற்றம்.
கம்ப்ரஸர் பகுதியில் இருந்து வழக்கத்திற்கு மாறான பயங்கர சத்தம்.
ப்ரிட்ஜ் இயங்கும்போது அடிக்கடி மெயின் சுவிட்ச் (MCB/Trip) ஆஃப் ஆவது.
அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவது.
ப்ரிட்ஜின் இரும்புப் பகுதியைத் தொட்டால் ஷாக் அடிப்பது (இது எர்திங் கோளாறு அல்லது மின்கசிவின் நேரடி அறிகுறி).
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.