Times of Puducherry
மழைக்காலத்தில் வீட்டின் பரண்கள், சமையலறை அலமாரிகள் மற்றும் கட்டில்களுக்கு அடியில் எலிகளும் பெருச்சாளிகளும் தஞ்சம் அடைவது வழக்கமான ஒன்று. இவை துணிகள், உணவுப் பொருட்கள் மற்றும் மின்சார ஒயர்களை சேதப்படுத்துவதுடன், கடுமையான நோய்த்தொற்றுகளையும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இவற்றை ரசாயன நச்சுகள் அல்லது பொறிகளைப் பயன்படுத்தி கொல்லாமல், இயற்கையான முறையில் வீட்டை விட்டு விரட்டுவதற்கான எளிய வழிகள் குறித்து பார்க்கலாம்.
புதினா எண்ணெய்
எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்கும் மோப்ப சக்தி மிக அதிகம். புதினாவின் அடர்ந்த கடுமையான வாசனையை அவற்றால் சகித்துக் கொள்ள முடியாது. சிறிய பஞ்சு உருண்டைகளில் 8 முதல் 10 சொட்டுகள் வரை புதினா எண்ணெயை ஊற்றி, சமையலறை மூலைகள், அலமாரிகளின் பின்பகுதி மற்றும் வீட்டிற்குள் நுழையும் கதவுப் பகுதிகளில் வைக்கலாம்.
மிளகு மற்றும் மிளகாய் தூள் ஸ்ப்ரே
மிளகின் காட்டமான நெடி எலிகளின் சுவாசப் பாதையில் எரிச்சலை உண்டாக்கி, உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடச் செய்யும். நசுக்கிய கருப்பு மிளகு அல்லது சிவப்பு மிளகாய்த் தூளை தண்ணீரில் கலந்து ஒரு கரைசலைத் தயாரிக்கவும். எலிகள் நடமாட்டம் உள்ள வடிகால்கள், வீட்டின் நுழைவாயில்கள் மற்றும் வளைகளுக்கு அருகில் இதை தெளிக்கலாம்.
கற்பூரம்
கற்பூரம் வெளியிடும் கடுமையான ரசாயன வாசனை எலிகளுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்தி, அவற்றை வீட்டை விட்டு வெளியேற தூண்டும். சிங்கிற்கு அடியில், பாத்திரம் கழுவும் இடம் மற்றும் அலமாரிகளின் அடியில் கற்பூர உருண்டைகளை வைக்கலாம்.வீட்டில் சிறு குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகள் இருந்தால் கற்பூரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள வலுவான சல்பர் சத்து மற்றும் காரமான வாசனை ஒரு இயற்கையான பூச்சி விரட்டியாகச செயல்படுகிறது. பூண்டு பற்களைத் தோலுரித்து நறுக்கியோ அல்லது வெங்காயத் துண்டுகளையோ எலிகளின் மறைவிடங்களில் வைக்கலாம். வெங்காயம் விரைவில் அழுகிவிடும் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதிய துண்டுகளை மாற்ற வேண்டும்.
பிரிஞ்சி இலை
சமையலுக்கு பயன்படும் பிரிஞ்சி இலையின் வாசனை மனிதர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தாலும், எலிகளுக்கு அது மிகுந்த எரிச்சலை தரும்.உலர்ந்த பிரிஞ்சி இலைகளை சமையலறை அலமாரிகள், உணவு தானியங்கள் வைக்கும் இடங்கள் மற்றும் தட்டுகளில் போட்டு வைப்பதன் மூலம் எலிகள் உணவைத் தொடுவதைத் தடுக்கலாம்.
தூய்மை மற்றும் நுழைவு வழிகளை அடைத்தல்
எலிகள் மீண்டும் வீட்டிற்குள் வராமல் இருக்க பின்வரும் முன்னெச்சரிக்கைகள் அவசியம் ஆகும்.
சமையலறையில் சிதறி கிடக்கும் உணவுகள் மற்றும் இரவு நேரத்தில் கழுவாமல் வைக்கப்படும் பாத்திரங்கள் எலிகளை ஈர்க்கும். எனவே, சமையலறையை எப்போதும் சுத்தமாக வைக்கவும்.
வீட்டின் கழிவுநீர் வடிகால் மூடிகள், சுவர்களில் உள்ள விரிசல்கள் மற்றும் கதவுகளுக்கு அடியில் உள்ள இடைவெளிகளை முறையாக அடைத்துவிட வேண்டும்.
குப்பைத் தொட்டிகளை எப்போதும் மூடி வைத்து, தினசரி அப்புறப்படுத்துவது நல்லது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.