Times of Puducherry
வீடுகளில் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு, சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ மாநில அரசு முதல் முறையாக மானியம் வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரூ.1 லட்சம் மானியம்
பிரதம மந்திரி சூர்ய கர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மூன்று கிலோ வாட் திறன் கொண்ட கூரை சூரிய மின்சக்தி அமைப்பிற்கு மத்திய அரசு ரூ.78,000 மானியம் அளித்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசும் ரூ.22,000 கூடுதல் மானியம் தர இருக்கிறது. இதனால் வீட்டின் கூரைகளில் 3 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பதற்கு மொத்த மானிய தொகை ரூ.1 லட்சமாக உயர இருக்கிறது.
மாநில அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
வீட்டு உபயோகப் பயனாளர்களிடையே மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பிரதம மந்திரி சூரிய கர் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் மானியத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
1 லட்சம் பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விண்ணப்பித்த பயனாளிகளுக்கும் இந்த கூடுதல் மானியம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2027 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ வாட் திறன் கொண்ட கூரை சூரிய சக்தி அமைப்பை நிறுவுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.30,000 உடன் கூடுதலாக மாநில அரசு ரூ.5000 மானியம் வழங்குகிறது.
மாநில அரசு தரும் மானியம் எவ்வளவு?
இரண்டு கிலோ வாட் அமைப்பை நிறுவுபவர்களுக்கு மத்திய அரசு ரூ.60,000 மானியம் வழங்கும் நிலையில் மாநில அரசு ரூ.10,000 வழங்க உள்ளது. மூன்று கிலோவாட் அமைப்பை நிறுவுபவர்கள் மத்திய அரசிடம் இருந்து ரூ.78,000-ம், மாநில அரசிடமிருந்து ரூ.22,000 என மொத்தம் ரூ.1 லட்சம் வரையிலான மானியத்தைப் பெற முடியும். மத்திய அரசின் மானியத்தை பெறும் நுகர்வோர்கள், மாநில அரசின் மானியத்தை பெற தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என்று அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
மத்திய அரசின் இணையதளம் வழியாக பெறப்படும் விண்ணப்பதாரர்களின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு சோலார் இணைப்பு இயங்க தொடங்கியதும் மாநில அரசின் மானியத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் pmsuryaghar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மொபைல் மற்றும் இமெயில் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் ‘Apply For Rooftop Solar’ என்பதை தேர்வு செய்து மாநிலம், மாவட்டம், மின்விநியோக நிறுவனம், சோலார் திறன், முகவரி விவரங்களை பதிவிட வேண்டும். இறுதியாக மின் கட்டண ரசீது, அடையாளச் சான்றுகளை பதிவேற்றி விண்ணப்பித்து சமர்ப்பித்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.