Times of Puducherry
திருச்சி மத்திய சிறை முன்பு சிறைவாசிகளின் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும், தமிழக தலைமைச் செயலாளரை மாற்றக் கோரியும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நாளை (அக்டோபர் 2) முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறினார். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 18 சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்படாமல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தாங்கள் கோரவில்லை என்றும், சட்டப்பூர்வமாக வழங்கக்கூடிய பரோல் மட்டுமே கோருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில் குறிப்பிட்ட சிறைவாசிகளுக்கு ஆண்டுக்கு 120 நாட்கள் வரை பரோல் வழங்கப்பட்டதாகவும், தற்போது தலைமைச் செயலாளரின் முடிவால் அது மறுக்கப்படுவதாகவும் சரீப் குற்றம்சாட்டினார். இதற்குப் பொறுப்பேற்று தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கியக் கோரிக்கை என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பட்டினப்பாக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டதற்கும் தலைமைச் செயலாளரின் வழிகாட்டுதலே காரணம் என அவர் கூறினார். தேர்தல் காலத்தில் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளருக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்து செய்து, அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழக அரசை முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்த சரீப், அதே நேரத்தில் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தங்களது கடமை என்றார். அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளைச் சட்ட ரீதியாக மட்டுமின்றி மனிதாபிமானத்துடனும் அணுக வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இஸ்லாமிய சிறைவாசிகளின் விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நீண்டகாலமாகச் சிறையில் உள்ளவர்களுக்குப் பரோல் வழங்குவதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமூகநீதித் துறை மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த கருத்தை வரவேற்பதாகக் கூறிய சரீப், தமிழக வெற்றிக் கழகக் கூட்டணிக்கு பாமக ஆதரவு அளித்தால் வரவேற்போம் என்றும் குறிப்பிட்டார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஓர் அரசு உருவாக வேண்டும் என்ற தங்களது நீண்டகால விருப்பம் நிறைவேறியுள்ளதாகவும், தவெக அரசை எதிர்ப்பது தங்களது நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசை விமர்சிக்கும்போது ஜனநாயக வரம்புகளைக் கடக்கக் கூடாது என்றும், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து அரசியல் விமர்சனங்களை ஜனநாயக முறையில் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர் ராயல் சித்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.