Times of Puducherry
தமிழகத்தில் வெங்காய விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வெங்காய வரத்து குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
திருநெல்வேலி காய்கறி மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.85 முதல் ரூ.98 வரை விற்பனையாகிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட நாசிக் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது ரூ.55 முதல் ரூ.60 உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை தொடங்கியது. இருப்பினும் ரேஷன் கடைகளுக்கும் போதிய வரத்து இல்லாததால் தமிழகத்தில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வெங்காயத்தின் கையிருப்பு குறைந்து வருகிறது. புதிய அறுவடைக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் இருப்பதால் வெங்காயத்தின் விலை அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதிகரித்து காணப்படும் சூழல் நிலவுகிறது. மேலும் வெங்காயத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வெங்காய சாகுபடியைக் குறைத்து கரும்பு சாகுபடிக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்திலேயே வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது.
வெங்காய விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது, “புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்தே காய்கறிகளின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. சிறிய மற்றும் பெரிய வெங்காய வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். நாசிக் பெரிய வெங்காயத்தை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியும். ஆனால் அதன் வரத்தும் குறைந்துள்ளதால் அந்த வெங்காயத்திற்கும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது” என்று கூறினர்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம், மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக உள்ளூர் வரத்தும் சரிந்துள்ளது. மழைப் பொழிவு குறைவாக இருந்ததும் இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அடுத்த சில மாதங்களுக்கு வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயரும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.