Times of Puducherry

சினிமாவாக மாறிய புத்தகங்கள்: தமிழில் ஹிட்டடித்த இந்த 6 படங்களின் இன்ஸ்பிரேஷன் புத்தகம் தான்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
22 Sep 2026 • 10:15 AM
Tamil Cinema 6 Movies Inspiration with Books

பொதுவாக ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு கதை திரைக்கதை மிகவும் முக்கியம். பெரும்பாலான இயக்குனர்கள் தாங்களே கதை திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குவார்கள். ஆனால் சில இயக்குனர்கள் ஒரு கதாசிரியரின் கதையோ அல்லது, மற்ற படங்களில் இருந்து இன்ஸ்பிரேஷன் ஆகியோ அல்லது ஒரு புத்தகத்தை அடிப்படையாக வைத்தோ படத்தை இயக்கி வெற்றியை கொடுப்பார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் புத்தகத்தை அடிப்படையாக வைத்து வெளியான 6 திரைப்படங்களை பார்க்கலாம்.

அசுரன் (புத்தகம்: பூமணியின் ‘வெக்கை’)

கிராமப்புற வாழ்க்கை, சாதிய பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியவற்றை இந்தப் புத்தகம் பேசுகிறது. இதை இயக்குனர் வெற்றிமாறன் 2019-ல் ‘அசுரன்’ திரைப்படமாக இயக்கினார். இதில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது.

பொன்னியின் செல்வன் 1 & 2 (புத்தகம்: கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’)

தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இதனை இரண்டு பாகங்களாக (2022 மற்றும் 2023) திரைப்படமாக்கினார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த 2 பாகங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

சூரரைப் போற்று (புத்தகம்: கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் ‘சிம்ப்ளி ஃபை’)

ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை பயணமே இந்தப் புத்தகம். இதன் தழுவலாக இயக்குனர் சுதா கொங்கரா ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை உருவாக்கினார். சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் தமிழில் பெரிய வெற்றியை பெற்றது. இந்தியில் அக்ஷைகுமார் நடிப்பில் ரீமேக் செய்யபபட்டது.

நான் கடவுள் (புத்தகம்: ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’)

பிச்சைக்காரர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கடினமான வாழ்க்கையை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இயக்குனர் பாலா இதனைத் தழுவி ‘நான் கடவுள்’ திரைப்படத்தை உருவாக்கினார். ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் சிறந்த இயக்குனர், பிரிவில் தேசிய விருதை வென்றது.

ஆளவந்தான் (புத்தகம்: கமல்ஹாசனின் ‘தாயம்’)

இரட்டைச் சகோதரர்களின் மன உளைச்சல் மற்றும் உளவியல் சிக்கல்களைப் பற்றிய நாவல் தான் தாயம். கமல்ஹாசன் எழுதிய இக்கதையை அடிப்படையாகக் கொண்டு, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001-ல் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், அணு ஹாசன், ரவீனா டன்டன், மனிஷா கொய்ராலா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (புத்தகம்: ஜேன் ஆஸ்டனின் ‘சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி’)

இரண்டு சகோதரிகளின் காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கை முறையைப் பேசும் ஆங்கில நாவல். இதனை தழுவி, இயக்குனர் ராஜீவ் மேனன் 2000-ல் தமிழ் சூழலுக்கு ஏற்ப மாற்றி இயக்கிய படம் தான் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. மம்மூட்டி, அஜித் குமார், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் வெற்றிப்படமாக அமைந்தது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top