Times of Puducherry

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? ‘முழுத் தடை இல்லை’... உச்சநீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 9:58 PM
Supreme Court rejects total firecracker ban seeks fixed hours for fireworks

பட்டாசுகளை முழுமையாக தடை செய்யும் திட்டம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நாள் முழுவதும் எந்த நேரத்திலும் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளையும், பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம்?

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை விசாரித்தது.

அப்போது, பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிப்பது பொதுமக்களின் உணர்வுகளை பாதிக்கும் என்றும், மறுபுறம் 24 மணி நேரமும் பட்டாசுகளை வெடிக்க அனுமதித்தால் வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதனால், இரு தரப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில், பட்டாசுகளை வெடிக்க குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கலாம் என்ற நிலைப்பாட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி?

விசாரணையின்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சிஎஸ்ஐஆர்-நீரி (CSIR-NEERI) பரிந்துரைத்துள்ள குறிப்பிட்ட ‘நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாயின்ட் கிரீன் கிராக்கர்ஸ்’ எனப்படும் பசுமை பட்டாசுகளுக்கு சில நிபந்தனைகளுடன் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த பட்டாசுகள் சிஎஸ்ஐஆர் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான நீரி இணைந்து உருவாக்கியவை. வழக்கமான பட்டாசுகளைவிட மாசு வெளியீட்டை குறைக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நிபந்தனைகள்

இந்த குறிப்பிட்ட பசுமை பட்டாசுகள் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களால் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவு மற்றும் உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் இதில் இடம்பெறக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பட்டாசுகளில் பேரியம் (Barium) பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தனியாக பரிசீலித்து வருகிறது.

அக்டோபர் 15-ல் மீண்டும் பரிசீலனை

பட்டாசுகளில் பேரியம் பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் நிபுணர் அமைப்புகளின் மதிப்பீட்டை தொடர்ந்து அக்டோபர் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க உள்ளது.

கடந்த ஆண்டு, தீபாவளியை முன்னிட்டு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) நிபந்தனைகளுடன் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் அப்போது உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போதைய விசாரணையில், பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்காமல், அதே நேரத்தில் நாள் முழுவதும் பட்டாசு வெடிப்பதை அனுமதிக்காமல், குறிப்பிட்ட நேர வரம்புடன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top