Times of Puducherry
வீட்டுக்குள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் தஞ்சம் அடைவது மழைக்காலங்களிலும், வெப்பம் அதிகரிக்கும் காலங்களிலும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பொதுவாக, பாம்பு வீட்டிற்குள் நுழைந்தால் அதை உடனடியாக கண்ணால் கண்டறிவது கடினம். ஆனால், அவை விட்டுச் செல்லும் சில குறிப்பிட்ட வாசனைகள் மற்றும் அறிகுறிகளைக் கொண்டு வீட்டில் பாம்பு இருப்பதை அறிய முடியும் என்று வனவிலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீட்டில் பாம்பு இருப்பதைக் காட்டும் முக்கிய அறிகுறிகள்
பாம்புகள் பயமடையும்போதோ அல்லது தங்களைப் பாதுகாத்து கொள்ள முற்படும்போதோ தங்களின் உடலிலிருந்து ஒருவித திரவத்தை சுரக்கின்றன. இது பழைய ஈரம் படிந்த பூஞ்சை, அழுகிய முட்டை அல்லது ஒருவித காரமான துர்நாற்றத்தை வீசும். வீட்டின் ஸ்டோர் ரூம், படிக்கட்டின் கீழ் பகுதி அல்லது இருட்டான மூலைகளில் திடீரென இதுபோன்ற விசித்திரமான துர்நாற்றம் வீசினால், அங்கு பாம்பு இருக்க வாய்ப்புள்ளது.
அழுகிய வெள்ளரிக்காய் போன்ற வாசனை
சில குறிப்பிட்ட வகை பாம்புகளின் இருப்பிடத்திலிருந்து லேசான வெள்ளரிக்காய் தோலின் வாசனை போன்ற அல்லது அழுகிய வாசனை வெளிப்படும். எந்த காரணமும் இன்றி மூடிய அறைகளிலோ அல்லது வீட்டின் மூலை முடுக்குகளிலோ இந்த வாசனை தொடர்ந்து அடித்தால் கவனமாக இருக்க வேண்டும்.
பாம்புச் சட்டை
பாம்புகள் தங்கள் வளர்ச்சி நிலையின் போது பழைய தோலைக் கழற்றி எறியும். வீட்டின் மூலைகள், பழைய பெட்டிகளுக்குப் பின்னால், கட்டிலுக்கு அடியில் அல்லது கூரையின் இடுக்குகளில் பாம்புச் சட்டை தென்பட்டால், அப்பகுதியில் பாம்பு உலவுவது உறுதியாகும்.
திடீரென எலிகள் மறைவது மற்றும் சலசலப்பு சத்தம்
வீட்டில் அதிக அளவில் எலித் தொல்லை இருந்து, திடீரென எலிகள் அனைத்தும் காணாமல் போனாலோ அல்லது வீட்டின் கூரை, மரப் பொருட்கள் மற்றும் சுவரோரங்களில் மெல்லிய ‘சலசலப்பு’ சத்தம் கேட்டாலோ, எலிகளை வேட்டையாடப் பாம்பு உள்ளே வந்திருக்கக் கூடும்.
பாம்பு எச்சம்
பாம்பின் கழிவு பொதுவாக சிறிய அடர் நிறப் பகுதியுடன், மேலே வெண்மையான பூச்சுடன் (Uric acid) காணப்படும். அதில் இரையின் எலும்புகள் அல்லது முடிகள் செரிக்கப்படாமல் இருப்பதையும் காண முடியும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வீட்டில் இதுபோன்ற வாசனையோ அல்லது அறிகுறிகளோ தென்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை.
பாம்பைக் கண்டாலோ அல்லது அதன் நடமாட்டத்தை உணர்ந்தாலோ அதைத் தாங்களாகவே அடிக்கவோ அல்லது பிடிக்கவோ முயற்சிக்கக் கூடாது.
குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை உடனடியாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
உடனடியாக உள்ளூர் வனத்துறை அலுவலர்களுக்கோ அல்லது பயிற்சி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட பாம்பு மீட்பாளர்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீட்டுச் சூழலை சுத்தமாகவும், தேவையில்லாத பழைய பொருட்களைக் குவிக்காமலும் பராமரிப்பதே பாம்புகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் சிறந்த வழியாகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.