Times of Puducherry

அரசின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் - இரா. சிவா கண்டனம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 5:06 PM
siva-child-death

இது தொடர்பாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –

உலகப் புகழ்பெற்ற புதுச்சேரி கடற்கரை சாலையில், முறையாக பராமரிக்கப்படாமல் அடியில் துருப்பிடித்து பலவீனமாக இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்து, பொம்மை விற்றுக்கொண்டிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லீன் – ரிஹானா தம்பதியினரின் 5 வயது சிறுவன் முகமது பாசில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த புதுச்சேரியையே உலுக்கியுள்ளது. இந்த துயர நிகழ்வு ஆழ்ந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. சிறுவனை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூடும் கடற்கரைச் சாலையில் நடந்தேறியச் இச்சம்பவத்திற்கு புதுச்சேரி அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். மக்களின் உயிரைக் காப்பாற்றத் தவறிய என்.ஆர்.காங்கிரஸ்–பாஜக கூட்டணி அரசை திமுக வன்மையாக கண்டிக்கிறது. சுற்றுலாத் துறையின் நிதியில் பொதுப்பணித்துறையால் போடப்பட்ட மின்கம்பம் எந்த காற்றும் இல்லாத நேரத்தில் விழுந்து ஒரு குழந்தையின் உயிரை பறித்திருக்கிறது. இது முழுக்க மின்துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. முதல்வர் இவ்விஷயத்தை விபத்து என்று அலட்சியம் காட்டக்கூடாது. உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு விபத்துக்கான காரணத்தை உடனடியாக ஆராய வேண்டும்.

கடற்கரை சாலை மட்டுமின்றி, புதுச்சேரி நகர் மற்றும் புறநகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பழுதடைந்த, துருப்பிடித்த மின் கம்பங்களை உடனடியாகக் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்க அரசு உத்தரவிட வேண்டும். நகரப் பகுதிகளில் மின் கம்பங்கள் மீது சாய்ந்திருக்கும் மரக்கிளைகளை வெட்ட வேண்டும். விபத்து ஏற்பட்ட பிறகு சரிசெய்வதை தவிர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்.

வனத்துறை அனுமதி மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளை ஒன்றிணைத்து அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு பதில் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும். மின்கம்பங்களில் தேவையில்லாமல் தொங்கும் மின் ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும். மின்கம்பங்கள் மீது கட்டப்பட்டுள்ள பதாகைகள், கேபிள் ஒயர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மீறி கட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும், உடமைக்கும் அரசு தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடற்கரைச் சாலையை ஒட்டிய கடலில் படகு சவாரி என்ற பெயரில் போலியாக அனுமதி இல்லாமல் படகு வைத்தும், தகுந்த பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கவசங்கள் இன்றியும் இயக்கி விபத்துக்கள் ஏற்படுவதும், அது அரசியல் பின்புலத்தால் மறைக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு படகு சவாரியை முறைப்படுத்த வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் படகை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படா வண்ணம் அரசு நிர்வாகம் இனியாவது விழித்துக்கொண்டு பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top