Times of Puducherry

சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கலாமா - இரா. சிவா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 4:34 PM
campaign

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சேதுசெல்வத்தை ஆதரித்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட கொட்டுப்பாளையம், புதுப்பேட், சுப்பையா நகர், குண்டுபாளையம், கவுண்டம்பாளையம், பாக்குமுடையான்பட்டு, கம்பளிசாமி மடம் பகுதிகளில் நேற்று மாலை திமுக நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

திலகர் நகர், விவிபி நகர் பகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் இரா. சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் டாக்டர் ஆ. இலட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது விவிப நகரில் வசிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான பேராசிரியர் மு. ராமதாஸ் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

வாக்கு சேகரிப்பின்போது, வானூர் சட்டமன்ற உறுப்பினர் கொளதம் திராவிடமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, கண்டமங்கலம் சேர்மன் வாசு, பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால், விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் டி.கே.பி. ரமேஷ், புதுச்சேரி மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின், சுந்தர் உள்ளிட்ட பலரும் உடனிருந்து வாக்குகள் சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பின்போது, செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பாளர் இரா. சிவா, தட்டாஞ்சாவடி தொகுதி மக்களிடம் ஒரு எழுச்சியை காண முடிகிறது. சிறந்த முறையில் திமுக வெற்றி பெறும். அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தற்காலிக சபாநாயகராக இருக்கிறாரா? இல்லையா?. அப்படி இருந்தால் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரலாமா? இது மக்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது. முதல்வர் ரங்கசாமி தனக்கு எங்கே நிரந்தர சபாநாயகர் பதவியை கொடுக்கமாட்டாரோ என்ற பயத்தில் அன்பழகன் களத்தில் இறங்கி உள்ளாரோ என்று தோன்றுகிறது. சபாநாயகரின் கண்ணியத்தை அவர் காப்பாற்ற வேண்டும். பாஜக தான் சபாநாயகர் நாற்காலியை அலங்கரிக்கும் என்று முன்னாள் சபாநாயகர் கூறியது குறித்து, அவர்களை யார் தடுத்தார்கள். இதில் எதிர்க்கட்சியான எங்களுக்கு என்ன வேலை. திமுக ஆளுநரிடம் வலியுறுத்தியும் இன்னும் நிரந்தர சபாநாயகர் நியமிக்கவில்லை. ஆட்சி அமைத்து 5 மாதம் கழித்து தான் தவணை முறையில் அமைச்சர்களுக்கு இலாகா அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்தும் கூட இன்னும் அமைச்சரவையை கூட்டி அரசின் பாலிசி என்ன என்று சொல்லவில்லை. பெயரளவிற்கு அமைச்சர்கள் செயல்படுகின்றனர். ஆளுநரும், முதல்வரும் நாடகம் ஆடிக்கொண்டு புதுச்சேரியை மன்னராட்சியாக நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் அது எதிரொலிக்கும்.

புதுச்சேரி கொலைநகரமாக உருவெடுத்துள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்து இதுவரை தட்டாஞ்சாடியில் மூன்று கொலைகள் அரங்கேறி உள்ளது. அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி பெரியார் நகரில் ஒரு கொலை என நான்கு கொலை நடந்துள்ளது. அரசும், காவல் துறையும் விழிப்புடன் செயல்பட்டிருந்தால் இதை தடுத்து இருக்கலாம். இவர்களின் அலட்சியத்தை கண்டு மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். காவல்துறை தனது கடமையை சரியாக செய்ய வேண்டும். தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் இருக்கிறது. அதனால் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top