Times of Puducherry
தென் இந்தியாவில் முக்கிய புனித தலமாக கேரளாவின் பரிமலை ஐயப்பன் கோயில் இருந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற இந்தத் திருக் கோயிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் இந்தியா முழுவதிலும் உள்ள பக்தர்கள் மாலையணிந்து 41 நாள்கள் கடுமையாக விரதம் இருந்து, இருமுடி கட்டி செல்வது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், மண்டல பூஜை, மகர விளக்கு, விஷு போன்ற நாள்களில் மட்டுமே கோயில் திறந்திருக்கும் என்பதாலும் அதிகளவில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அவற்றின் எடை குறைந்துவிட்டதாக கடந்த ஆண்டு வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தங்கக் கவச முறைகேடு விவகாரம் பூதாகரமான நிலையில், கேரள உயா்நீதிமன்ற உத்தரவுப்படி முந்தைய இடதுசாரி கூட்டணி ஆட்சியில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் சன்னிதானத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 55 பவுன் தங்கக் கிரீடம் திருடப்பட்டதாக செய்தி வெளியாகியது. 2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய சுமார் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 55.75 சவரன் கிரீடம் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பதிலாக ஒரு போலி கிரீடம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தங்கக் கிரீடம் தொலைந்து போகவில்லை என்று திருவாபரணம் ஆணையர் கூறியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள ஐயப்பனின் ஆபரணப் பொருள்களின் சரிபார்ப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தங்கக் கிரீடம் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஐயப்பனின் ஆபரணப் பொருள்களின் அறிக்கையில் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்தக் கிரீடம், கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
விளக்கம்
இந்நிலையில், சபரிமலை கோயிலின் தங்க கிரீடம் பாதுகாப்பாக உள்ளதாக திருவாபரண ஆணையர் ரெஜிலால் விளக்கம் அளித்துள்ளார். பாதுகாப்பு அறையில் வைத்திருந்த அரைக்கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமானதாக வெளியான தகவலுக்கு திருவாபரண ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார். “பாதுகாப்பு அறையில் வைத்திருந்த அசல் தங்க கிரீடம் பாதுகாப்பாக உள்ளது; சரிபார்ப்பின் போது குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்” என்று திருவாபரண ஆணையர் விளக்கம் அளித்திருக்கிறார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.