Times of Puducherry
நவீன உலகத்தில் அத்தனை சேவைகளுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் சூழலில், வெறும் ரூ.1-க்கு ஏசி அறை, இலவசத் தேநீர் மற்றும் சுத்தமான நெய்யில் சமைக்கப்பட்ட உணவை வழங்கும் ஒரு தர்ம ஸ்தாபனம் இந்தியாவில் இயங்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? ராஜஸ்தானின் நாகௌர் – ஜோத்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘கௌ சிகிச்சை மையம்’ தான் இந்த அரிய சேவை மையமாகத் திகழ்கிறது.
1 ரூபாய்க்கு விஐபி ஏசி அறை
2008-ஆம் ஆண்டு சுவாமி குஷால் கிரி ஜி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம், நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சொர்க்கமாக விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட (VIP AC) அறைகள் வெறும் 1 ரூபாய்க்கு வழங்கி உபசரிக்கப்படுகிறது.
24 மணி நேர இலவச டீ
ஆசிரமத்தின் மையப் பகுதியில் எந்த நேரத்திலும் பயணிகள் இலவசமாக பருகிச் செல்ல 24 மணி நேரத் தேநீர் விநியோகம் நடைமுறையில் உள்ளது. லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தின் போது குடிப்பதற்கு இங்கிருந்து இலவசமாக குளிர்ந்த நீரையும் எடுத்துச் செல்லலாம்.
தூய்மையான நெய் உணவு – கட்டண விவரம்
பசு மற்றும் எருமைப் பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான நெய்யில் தயாரிக்கப்படும் பாரம்பரிய ராஜஸ்தானி உணவுகள் இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவை.
ரூ. 25 மினி தட்டு: 4 ரொட்டிகள், காய்கறி சப்ஜி மற்றும் மோர்.
ரூ. 50 அன்லிமிடெட் தட்டு: ரொட்டி, அப்பளம், சேவ் காய்கறி, மோர், பருப்பு கறி மற்றும் சாதம் அடங்கிய முழுமையான சைவ உணவு.
மாடுகளுக்கான உலகத் தர மருத்துவமனை
இந்த ஆசிரமத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த மாடுகளுக்கு இங்கு அதிநவீன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.150 கிலோமீட்டர் சுற்றளவில் விபத்தில் சிக்கிய அல்லது நோயுற்ற மாடுகளை மீட்டெடுக்க 18 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. சிகிச்சைக்காகச் சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நந்த காமதேனு சமாதி
இந்த ஆசிரமத்தின் முதல் பசுவான நந்த காமதேனுவின் சமாதி வளாகத்தில் அமைந்துள்ளது. இன்றும் காலை, மாலை வேளைகளில் வழிபடப்படும் இந்த தெய்வீக பசுவிடம் வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும், காசி மற்றும் உஜ்ஜைனிக்கு அடுத்தபடியாக மிகவும் பிரமிக்க வைக்கும் கால பைரவர் கோயிலும் இங்கு அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்குக் குங்குமப்பூ சுவையிலான பேடா பிரசாதமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.