Times of Puducherry
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரை, அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று (28.09.2026) தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் .ப.ராஜ்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:இத்திட்டத்தில் 22.06.2026 முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் பாலினவேறுபாடுன்றி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. 22.06.2026 முதல் தற்போது வரை 3120 வட்டார வாரியாக தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. 22.06.2026 முதல் 25.09.2026 வரை அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வரிசைபடி வட்டார வாரியாக அழைப்பிதழ் வழங்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆகிய நான்கு இடங்களில் தங்க மோதிரம் வழங்கப்படும். 26.09.2026 அன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடலூர், அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி ஆகிய வட்டாரங்களை சார்ந்த 1,327 பயனாளிகளுக்கும், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஆகிய வட்டாரங்களை சார்ந்த 543 பயனாளிகளுக்கும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் காட்டுமான்னார்கோயில், சிவக்கம் வட்டாரங்களை சார்ந்த 493 பயனாளிகளுக்கும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர், நல்லூர் வட்டாரங்களை சார்ந்த 757 பயனாளிகள் என மொத்தம் 3,120 பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
அண்ணாகிராமம், காட்டுமான்னார்கோயில், கிருஷ்ணாபுரம் மற்றும் நல்லூர் வட்டாரங்களில் 28.09.2026 முதல் 01.10.2026 வரை, கடலூர் மற்றும் சிவக்கம் வட்டாரங்களில் 02.10.2026 முதல் 06.10.2026 வரை, மங்களூர் வட்டாரத்தில் 02.10.2026 மற்றும் 03.10.2026, பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் 02.10.2026, 03.10.2026 மற்றும் 05.10.2026, விருத்தாசலம் வட்டாரத்தில் 04.10.2026 முதல் 07.10.2026 வரை, பண்ருட்டி வட்டாரத்தில் 07.10.2026 முதல் 10.10.2026 வரை, கீரப்பாளையம் வட்டாரத்தில் 06.10.2026 முதல் 08.10.2026 வரை, கம்மாபுரம் வட்டாரத்தில் 08.10.2026 முதல் 11.10.2026 வரை, குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 11.10.2026 முதல் 14.10.2026 வரை என குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் காலை 25 நபருக்கும் மதியம் 25 நபருக்கும் மோதிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய, e-KYC பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆறு வகையான தமிழ்நாடு குடியிருப்பு அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை பெற்ற தாய்மாராக இருக்க வேண்டும் என மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப., மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைசெல்வம், மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார் இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், இணை இயக்குநர் நலப்பணிகள் பிரமிளா, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.