Times of Puducherry
ராமநாதபுரம் முடுக்குத்தரவை ரோட்டில் போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு போலீசார் கடந்த 17 ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடிசை மாற்று வாரியம் அருகே நின்றிருந்த 5 பேர், போலீசார் வருவதை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். அப்போது போலீசார் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்துள்ளனர்.
அதில் ரூ.5 கோடி மதிப்பிலான 38 தங்க கட்டிகள், 28 பவுன் தங்க நகை, ரூ.12.20 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த குப்புசாமி 45, பரமக்குடி லீலாவதி நகர் செல்வராஜ் 62, துாத்துக்குடி மாவட்டம் ஆத்துார் சரவணன் 50, மாரிமுத்து 27, வேலாயுதம் 40, என தெரிய வந்துள்ளது. முதலில் 5 பேரும் தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளனர்.
பின்னர் எம்.ஜி.ஆர்., நகர் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தங்கம், ரொக்கம் கிடைத்ததாகவும், அதை பங்கிடுவதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கேணிக்கரை காவல் நிலைய போலீசார் அந்த 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மத்திய வருவாய் புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களுக்கு தங்க கட்டிகள் கடத்துவது அதிகரித்துள்ளது. தற்போது கிலோ கணக்கில் சிக்கிய தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது கொள்ளையடித்த தங்க நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றினரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. முழு விசாரணைக்கு பின் தங்கம் எவ்வாறு இவர்களுக்கு கிடைத்தது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பறிமுதலான தங்கம், ரொக்கம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.