Times of Puducherry
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கையில்:
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ‘ராம் யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டதும், 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவி உடையில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் வேடங்களில் பங்கேற்றதும் தற்போது பொதுவெளியில் விவாதப் பொருளாகியுள்ளது.
சுற்றுலாவை முன்னிறுத்த வேண்டிய அரசு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட மத அடையாளம் கொண்ட பெயரும் காட்சியமைப்பும் வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன? தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை நடத்தும் நிகழ்ச்சிகளில் அனைத்து மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கும் சமமான அணுகுமுறை பின்பற்றப்படுகிறதா? குழந்தைகளை ஒரே மாதிரியான காவி உடையில் பங்கேற்கச் செய்தது யாருடைய முடிவு? அதற்கான திட்டமிடல், அனுமதி மற்றும் நிர்வாகப் பொறுப்பு யாரிடம் இருந்தது?
தனுஷ்கோடியின் வரலாறு, கடல்சார் வாழ்வியல், மீனவர்களின் பண்பாடு, ஈழத் தமிழர்களுடனான வரலாற்றுத் தொடர்பு போன்ற பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, அரசு சுற்றுலா நிகழ்ச்சியில் ஒரே மதக் கதையாடல் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன? மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு சுற்றுலாத் துறை வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் எந்த மதத்திற்கும் எதிராகவோ, ஆதரவாகவோ அல்லாமல் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் அரசியலமைப்புச் சார்ந்த மதச்சார்பற்ற கொள்கைக்கு ஏற்பவும் அமைய வேண்டும்.
அரசுத் துறைகளின் நிகழ்ச்சிகளில் மத அடையாளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளனவா என்பதையும் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட கலை நிகழ்ச்சியாகக் கடந்து செல்லாமல், அரசு நிகழ்ச்சிகளின் நோக்கம், நிர்வாகப் பொறுப்பு மற்றும் மதச்சார்பற்ற நடைமுறை குறித்து உரிய ஆய்வு நடைபெற வேண்டிய விஷயமாக உள்ளது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.