Times of Puducherry
புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகத்தை மாண்புமிகு கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ. ராஜவேலு அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அருங்காட்சியகத்தின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அமைச்சர் அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், பழங்காலப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், அருங்காட்சியகத்தைப் பார்வையிட வந்திருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் கலந்துரையாடி, அருங்காட்சியகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் ரோமன் ரோலண்ட் நூலகத்திற்குச் சென்ற மாண்புமிகு அமைச்சர், நூலகத்தின் அனைத்து பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நூலகத்திற்கு வந்திருந்த வாசகர்களிடம் அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
வாசகர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களுக்கென தனியான படிப்பிட வசதி ஏற்படுத்தவும், அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நூலகத்திற்கு வெளியே மேற்கூரை வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் S. சக்திவேல், கண்காணிப்பாளர் R. அருள்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.