Times of Puducherry

என்.ஐ.டி நாகாலாந்து உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: புதுச்சேரியில் கையெழுத்து

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 10:27 PM
pu-nitnagaland

புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி) நாகாலாந்து ஆகிய இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆதரவுடன் செயல்படும் துரிதப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை நெட்வொர்க் திட்டத்தின் மூலமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் மைய நிறுவனமாக செயல்பட, புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி நாகாலாந்து ஆகியவை துணை நிறுவனங்களாகப் பங்கேற்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு சர்வதேச உறவுகள் துறை டீன் பேராசிரியர் விக்டர் ஆனந்த்குமார் வரவேற்புரையுடன் தொடங்கியது. இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் வரவேற்றுப் பேசிய அவர், கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பேசினார். மேலும் இத்தகைய நிறுவன அளவிலான ஒத்துழைப்புகள், பரஸ்பர நிபுணத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைப்பதற்கும், இடைநிலை ஆராய்ச்சிக்கான வலுவான சூழலை உருவாக்குவதற்கும் வாய்ப்பளிக்கும். புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளரும், புதுவைப் பல்கலைக்கழகத்தின் திட்ட முதன்மை ஆய்வாளருமான (Lead PI) பேராசிரியர் பெ. ஏழுமலை, இந்த ஒப்பந்தத்தின் உருவாக்கம் மற்றும் அதன் முன்னேற்றங்களை விளக்கியதோடு, புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி நாகாலாந்து இடையேயான இந்த ஒத்துழைப்பை முறைப்படுத்தக் காரணமான நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார். கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், அறிவுப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை எளிதாக்குவதில் இந்தக் கூட்டாண்மையின் திறனையும் அவர் எடுத்துரைத்தார்.

என்.ஐ.டி நாகாலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோதி பிரசாத் போரா, புரிந்துணர்வு ஒப்பந்த முன்மொழிவைச் சமர்ப்பித்து, இரு நிறுவனங்களுக்கும் இடையே சாத்தியமான ஒத்துழைப்புப் பகுதிகள் குறித்து விரிவாக விளக்கினார். கூட்டு ஆராய்ச்சி, கல்விசார் கலந்துரையாடல்கள், நிபுணத்துவப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர ஆராய்ச்சித் திறன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களையும் அவர் விளக்கினார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு, நாடு முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் புதுவை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூட்டுறவுகளை விரிவுபடுத்துவதில், சிக்கலான அறிவியல் மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு ஆராய்ச்சி அவசியமாகும். இதுபோன்ற ஒப்பந்தங்கள், நிறுவனங்கள் தங்கள் நிபுணத்துவம், உள்கட்டமைப்பு மற்றும் யோசனைகளைப் பகிர்ந்துகொள்ள உதவுவதோடு, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என்று குறிப்பிட்டார்.

என்.ஐ.டி நாகாலாந்தின் இயக்குநர் பேராசிரியர் இளையபெருமாள், என்.ஐ.டி நாகாலாந்து மற்றும் புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான நீண்ட கால கல்வி மற்றும் ஆராய்ச்சி உறவுகள் குறித்துப் பேசினார். PAIR திட்டத்தில் வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து பங்கேற்கும் ஒரே நிறுவனம் என்.ஐ.டி நாகாலாந்து மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முன்னணி நிறுவனங்களுடன் ஆராய்ச்சி இணைப்புகளை வலுப்படுத்துவதற்கு இது வழங்கும் வாய்ப்புகளையும் வலியுறுத்தினார். இரு நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடவும், கூட்டுத் திட்டங்களை உருவாக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என வலியுறுத்தினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறைப்படுத்துவதில் பங்கேற்றுப் பங்களித்த இரு நிறுவனங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்து, புதுவைப் பல்கலைக்கழகத்தின் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பேரா. ஆர். பிரசாந்த் ஆற்றிய நன்றியுரையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் புதுவைப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் குணசேகரன், இயக்குநர் (SEI & RR) பேரா. கே. தரணிக்கரசு, இயக்குநர் (C&CR) பேரா. நடராஜன், புதுவைப் பல்கலைக்கழக நிதி அலுவலர் பேராசிரியர் முனைவர். எம். கிருஷ்ணமூர்த்தி, மதன்ஜீத் ஸ்கூல் ஆஃப் கிரீன் எனர்ஜி டெக்னாலஜிஸ் டீன் பேரா. பி. எம். ஜாபர் அலி மற்றும் பல்வேறு துறைகளின் டீன்கள், தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வானது, இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், திட்டத்தின் நோக்கங்களை முன்னெடுப்பதிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி நாகாலாந்து ஆகிய இரு நிறுவனங்களும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் கல்விசார் திறன் மேம்பாடு ஆகியவற்றில் நிலையான கூட்டுறவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top