Times of Puducherry
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால்
சொத்துக்களை வாங்க அல்லது விற்கும்பொழுது பத்திரப்பதிவு என்பது முக்கியமான நடைமுறையாகும். நாம் எத்தனை முறை படித்து பார்த்தாலும் சில தவறுகள் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும். பத்திரம் பதிவு செய்து முடித்த பின்னர், அதை பொறுமையாக வாசித்துப் பார்க்கும் பொழுது பிழைகள் கண்ணுக்கு புலப்படலாம். அப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும். பத்திரத்தில் பிழைகளை கண்டறிந்தால் அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிழை திருத்தல் பத்திரம்
உங்களுடைய சொத்து பத்திரத்தில் எழுத்து மற்றும் வார்த்தைகள் பிழைகள் இருப்பின் அதை சரி செய்ய “பிழை திருத்தல்” பத்திரத்தை பயன்படுத்த வேண்டும். இதனை “சரிபடுத்தும் ஆவணம்” அல்லது “சீர் செய்யும் ஆவணம்” என்று அழைக்கின்றனர். அடமானம், விடுதலை, அக்ரிமெண்ட், செட்டில்மெண்ட், ஒப்பந்தம், கிரயம், பாகப்பிரிவினை, உயில் போன்ற அனைத்து ஆவணங்களுக்கும் இந்த “பிழை திருத்தல்” பத்திரத்தை பயன்படுத்த முடியும். பட்டாவையும், பத்திரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் ஒன்றாக இல்லை என்றால் சொத்தை வாங்க தயங்குவர். இதற்காக சாதாரண “பிழை திருத்தல்” பத்திரம் போடலாம்.
பிழை திருத்தல் பத்திரம் மூலம் திருத்தக்கூடிய தவறுகள்
இன்னார் வீட்டிற்கு வடக்கே என எழுதுவதற்கு பதிலாக இன்னார் வீட்டிற்கு கிழக்கே என தவறாக எழுதுவது, பட்டா எண்ணை பத்திரத்தில் தவறாக குறிப்பிடுவது, சர்வே எண்ணில் பிழைகள் இருப்பது, முன்பு உள்ள பத்திரங்களின் எண்களை எழுதும் பொழுது தவறாக எழுதுவது, தந்தை பெயர் அல்லது இனிஷியலை தவறாக எழுதுவது, கதவு எண், ஊர் பெயர், பத்திரம் பதிபவரின் பெயர் ஆகியவற்றை தவறாக எழுதுவது, கிரய பத்திரத்தில் மேப் விடுபட்டு போவது, மின் இணைப்பை மாற்றி எழுதுவது, தெரு பெயர், திசைகள், எல்லைகள் போன்ற தவறுகளை சாதாரண பிழை திருத்தல் பத்திரம் மூலம் திருத்திவிட முடியும்.
உரிமை மாறும் பிழை திருத்தல் பத்திரம்
அதேசமயம் இரண்டு ஏக்கர் நிலத்தை ஒரு ஏக்கர் என்று மாற்றி எழுதி விடுவது போன்ற பிழையால் பட்டா மாறுவது தடையாகிவிடும். இதனை திருத்துவதற்கு “உரிமை மாறும் பிழை திருத்தல்” பத்திரம் போட வேண்டும். இந்த பத்திரம் எழுதும் போது சரியான அளவை குறிப்பிட்டு அதற்கு உண்டான சந்தை மதிப்பை வைத்து கட்டணம் செலுத்தினால் தான் இந்த உரிமை மாறும் பிழை திருத்தல் பத்திரம் போட முடியும். குறைவான சதுர அடி நிலத்தை அதிகமாக எழுதி விட்டு, அதனை திருத்தும் பொழுது சார் பதிவாளர் அலுவலகத்தில் கட்டிய முத்திரைத்தாள் தொகையை திரும்பப் பெற முடியாது. சொத்தை விற்ற நபர் பிழை திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்து பிழை திருத்தல் பத்திரம் போடலாம்.
புதிய கிரய பத்திரம்
சொத்தைப் விற்ற நபருக்கு வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாவது வாரிசுகள், மூன்றாவது வாரிசுகள் மூலம் பிழை திருத்தல் பத்திரம் போடலாம். அதற்கும் வழியில்லை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும். சொத்தை விற்ற நபர் உயிருடன் இருந்தும் பிழை திருத்தல் பத்திரம் போட மறுக்கிறார் என்றாலும் நீதிமன்றத்தையே நாட வேண்டும். சர்வே எண், நீல அகல அளவுகள், விஸ்தீரணம் போன்ற அனைத்துமே பிழையாக இருந்தால் பிழை திருத்தம் பத்திரத்திற்கு பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.
நாமே திருத்துவது சட்ட விரோதம்
சில ஆவணங்களில் ஏற்படும் சிறு தவறுகள் உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிஷியல் போன்ற தவறுகளை பத்திரப்பதிவு செய்த பிறகு கண்டுபிடித்து விட்டால் அதை தாமாக திருத்துவது, அமிலம் வைத்து அழிப்பது, ஒயிட்னர் வைத்து மாற்றுவது போன்ற செயல்கள் முற்றிலும் தவறானது. உதாரணத்திற்கு மனை எண் 10 என்பதற்கு பதிலாக தவறுதலாக 11 என இருந்தால் பத்திரப்பதிவுக்கு பிறகு நீங்களாகவே 10 என திருத்தினாலும் பதிவு அலுவலக ஆவணங்களில் அது 11 ஆகவே இருக்கும். இது போன்று நீங்களே திருத்தம் செய்து கொள்வது சட்டவிரோதமாகும். எனவே உங்கள் பத்திரங்களில் அல்லது ஆவணங்களில் பிழைகள் இருந்தால் அதை முறையாக பிழை திருத்தல் பத்திரம் மூலம் மாற்றிக் கொள்வதே சரியான முறையாகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.