Times of Puducherry
பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளித் தோழரான 81 வயது முதியவர் அஸ்கர் அலி வோரா, பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிரான தனது 15 ஆண்டுகால நில ஆக்கிரமிப்புப் போராட்டத்தில் வெற்றி பெற்று, தனது நிலத்தை மீட்டுள்ளார்.
15 ஆண்டுகால நிலப் போராட்டம்:
குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் மோடியுடன் படித்தவர் அஸ்கர் அலி வோரா. இவர் 1989-இல் மகாராஷ்டிராவின் பாயந்தர் கிழக்கு பகுதியில் 2,810 சதுர மீட்டர் நிலத்தை வாங்கினார். ஆனால், 2011-ஆம் ஆண்டில் இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்குச் சொந்தமான 'செவன் எலவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' மற்றும் 'சுயம் பில்டர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் ஆக்கிரமித்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் காவல் துறை, வருவாய்த் துறை என 15 ஆண்டுகளாகப் போராடி வந்தார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு:
கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மும்பை வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அஸ்கர் அலி வோரா, தன் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரதமரும் இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதிரடித் திருப்பம், நிலம் ஒப்படைப்பு:
பிரதமர் மோடியைச் சந்தித்த சில தினங்களிலேயே மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டனர். முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா நேரில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தின் முடிவில், சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையை முழுமையாகத் துறப்பதாகவும், பெறப்பட்ட கட்டட அனுமதிச் சான்றுகளைத் திரும்ப ஒப்படைப்பதாகவும் எம்.எல்.ஏ எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். மேலும், அஸ்கர் அலி வோராவிற்கு எதிராகத் தான் அளித்திருந்த புகாரையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
பிரதமரின் ஒரே ஒரு சந்திப்பிற்குப் பிறகு, 15 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட்டு முதியவருக்கு நிலம் மீட்டுத் தரப்பட்டது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.