Times of Puducherry

மாணவ சமுதாயத்தைச் சீரழிக்கும் போதைக்கலாச்சாரத்தைஊக்குவிக்கும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசுக்கு மாநில திமுக கடும் கண்டனம் !

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
11 Sep 2026 • 1:17 PM

மாணவ சமுதாயத்தைச் சீரழிக்கும் போதைக்கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் புதுச்சேரி அரசுக்கு மாநில திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆன்மீகம், அமைதி, சுற்றுலா, கல்வி வளர்ச்சி, கலாச்சாரத்திற்கு பெயர்போன புதுச்சேரி மாநிலம் இன்று போதை மாஃபியா கும்பலிடம் சிக்கி உள்ளதால் புதுச்சேரி மாநிலத்தின் எதிர்காலம் என்னவாகுமோ என்று எண்ணும்போது நெஞ்சம் பதபதைக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவிகள் பள்ளியில் குடிபோதையில் இருந்ததாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மாநிலத்தின் அமைதியான சூழலையும், கல்விப் பாரம்பரியத்தையும் சீரழிக்கும் வகையில் நடந்துள்ள இச்சம்பவம் ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களையும் உலுக்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கிடைப்பதும், பள்ளி மாணவ, மாணவிகளின் கைகளில் இன்று மது பாட்டில்கள் தாராளமாகப் புழங்குவதற்கும் காரணியாக இச்சம்பவம் அரங்கேறி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தை குடிகாரர்களின் புகலிடமாக மாற்றத் துடிக்கும் இந்த அரசு, கல்விக் கூடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டது. இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு மாநிலத்தை கொண்டு சென்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசின் நிர்வாகத் தோல்வியையும், கல்வித் துறையின் அலட்சியத்தையுமே இது காட்டுகிறது. இச்சம்பவத்திற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகள் மீதும், போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் காவல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளிகளுக்கு அருகில் மது மற்றும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தேவையான மனநல ஆலோசனைகளையும், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்களையும் அரசு போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து அலட்சியமாக இந்த அரசு செயல்படுமே ஆனால் மாணவர்களின் எதிர்கால நலனைக் காக்க, புதுச்சேரி மாநில திமுக மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தும் என்று எச்சரிக்கிறோம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top