Times of Puducherry
அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் வாகன விபத்துகள், மருத்துவமனை அலட்சியங்கள் மற்றும் குடும்பச் சொத்து தகராறுகளின் போது, சட்டரீதியாக நமக்கு இருக்கும் உரிமைகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். பொதுமக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்று நிவாரணம் அடைவதற்கான முக்கிய சட்ட வழிகாட்டுதல்கள் குறித்து பார்க்கலாம்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லையெனில் இழப்பீடு பெறுவது எப்படி?
வாகன விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டாலோ அல்லது படுகாயமடைந்தாலோ, விபத்தை ஏற்படுத்திய வாகனத்திற்கு மோட்டார் காப்பீடு இல்லை என்றாலும் பாதிக்கப்பட்டவர் நஷ்டஈடு பெற சட்டத்தில் வழிவகை உள்ளது. காப்பீடு இல்லாத பட்சத்தில், விபத்து நஷ்டஈடு தீர்ப்பாயத்தில் அந்த வாகன உரிமையாளருக்கு எதிராக நேரடியாக வழக்கு தொடரலாம்.
சொத்துகளை ஏலம் விடுதல்
நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், உரிமையாளர் தொகையைச் செலுத்த தவறினால், 'நிறைவேற்று மனு' தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் உரிமையாளரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்து, ஏலத்தில் விட்டு இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.
விபத்து ஏற்படுத்திய வாகனம் எதுவென்றே தெரியாமல் தப்பி ஓடிவிட்ட சூழலில் மத்திய அரசின் 'பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு திட்டத்தின்' கீழ் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அரசு வழங்கும் நிவாரணத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
மருத்துவ அலட்சியம் – தவறான சிகிச்சைக்கு நஷ்டஈடு கோருவது எப்படி?
மருத்துவர் அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் நோயாளிக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டாலோ, அது 'சேவைக் குறைபாடு' எனக் கருதப்படும். முதற்கட்டமாக, ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதற்குத் தேவையான நஷ்டஈடு தொகையை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் மருத்துவமனைக்கு வழக்கறிஞர் மூலம் 'சட்ட அறிவிப்பு' அனுப்ப வேண்டும்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
அவர்கள் உரிய நிவாரணம் வழங்க மறுக்கும் பட்சத்தில், மாவட்ட அல்லது மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரலாம். நுகர்வோர் நீதிமன்றம் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட மாநில மருத்துவக் கவுன்சிலிலும் அந்த மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி புகார் அளிக்கலாம். வழக்கு விசாரணையின் போது மருத்துவமனையின் 'சிகிச்சை ஆவணங்கள்' மிக முக்கிய ஆதாரமாகப் பயன்படும்.
நீதிமன்றத்திற்கு செல்லாமல் சொத்து தகராறுகளை சுமுகமாக முடிப்பது எப்படி?
சொத்து சம்பந்தப்பட்ட உரிமையியல் பிரச்சனைகளுக்கு பொதுவாக சிவில் நீதிமன்றங்களை அணுகி நீண்ட காலம் வழக்கு நடத்துவது வழக்கமான ஒன்று. ஆனால், பண விரயமும் நேர விரயமும் இன்றி சுமுகமாக முடிக்க மாற்று வழிகள் உள்ளன.
நீதிமன்றக் கட்டணம் செலுத்த வசதியில்லாதவர்கள் அல்லது வழக்கை சுமுகமாக முடிக்க விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் 'மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை' அணுகலாம்.
நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்தாலும் கூட, 'மத்தியஸ்த மையம்' (Mediation Centre) மூலம் இரு தரப்பும் பரஸ்பரம் பேசி சுமுகத் தீர்வு காண முடியும். லோக் அதாலத் மூலம் எட்டப்படும் தீர்ப்பிற்கு சிவில் நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணையான செல்லுபடித் தன்மை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.