Times of Puducherry

ரயில் டிக்கெட்டில் வயதை மட்டும் தவறாக போட்டுவிடாதீர்கள்; பயணிகள் அறிய வேண்டிய முக்கிய சட்டம்!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 3:55 PM
never enter the wrong age on a train ticket

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பெயர், பாலினம் மற்றும் வயது ஆகிய விவரங்களை பயணிகள் கவனமாக பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, டிக்கெட்டில் உள்ள வயதும், பயணிகளின் அரசு அடையாள அட்டையில் (Aadhaar, PAN, Voter ID) உள்ள வயதும் வேறுபட்டால், பயணத்தின்போது தேவையில்லாத சட்ட சிக்கல்களையும் பண விரயத்தையும் சந்திக்க நேரிடும்.

தவறான வயதும் TTE-ன் அதிகாரங்களும் (ரயில்வே சட்டப் பிரிவு 54)

1989-ஆம் ஆண்டு இந்திய ரயில்வே சட்டத்தின் பிரிவு 54-இன் படி, பயணச் சீட்டு பரிசோதகருக்கு பயணிகளின் டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க முழு அதிகாரம் உள்ளது. தட்டச்சுத் தவறால் வயதில் சிறிய மாற்றம் இருந்தால், செல்லுபடியாகும் அசல் அடையாள அட்டையைக் காண்பிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் பொதுவாகப் பரிசீலிப்பார்.

சலுகை முறைகேடுகள்

தவறான வயதைப் பயன்படுத்தி மூத்த குடிமக்கள் சலுகை (Senior Citizen Concession) அல்லது இதர கட்டண விலக்குகளைப் பெற்றிருந்து, சோதனையின் போது அது தவறெனக் கண்டறியப்பட்டால், டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிக்கவோ அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கவோ முடியும்.

2. ரூ. 7,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் – ஒரு எச்சரிக்கை நடவடிக்கை

சமீபத்தில் பயணி ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்தபோது, தனது வயது 24-க்கு பதிலாக தவறுதலாக 1 என பதிவாகியிருந்தது. அவரிடம் செல்லுபடியாகும் அசல் அடையாள அட்டை இருந்தபோதிலும், வயது விவரத்தில் ஏற்பட்ட இந்த தீவிர முரண்பாடு காரணமாக, அவர், டிக்கெட் இல்லாமல் பயணித்தவராக (Without Ticket) கருதப்பட்டார். இதன் விளைவாக, டிக்கெட் பரிசோதகர் அவருக்கு ரூ. 7,035 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். எனவே, முன்பதிவு செய்யும் போது உள்ளிடும் தகவல்களில் கூடுதல் கவனம் தேவை.

ஆன்லைன் டிக்கெட்டில் வயதை மாற்ற முடியுமா?

IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் பதிவு செய்யப்பட்ட இ- டிக்கெட்டுகளில் (E-Tickets), ஆன்லைனிலேயே சுயமாக பெயரையோ அல்லது வயதையோ மாற்றுவதற்கான வசதி கிடையாது.

திருத்தம் செய்ய என்ன வழி?

பயணத் தேதிக்கு முன்பாக, உங்கள் இ – டிக்கெட் நகல் (Printout) மற்றும் அசல் அடையாள அட்டையுடன் அருகிலுள்ள ரயில் நிலையத்தின் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரை நேரில் அணுக வேண்டும்.

தவறுதலா நடை பெற்ற பிழை குறித்து எழுத்துப்பூர்வமாக மனு அளித்து, ரயில்வே அதிகாரியின் அனுமதியுடன் டிக்கெட்டில் உரிய திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.

ரயில் பயணத்திற்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, எந்தவொரு நிலையத்திலும் டிக்கெட்டில் மாற்றங்களைச் செய்வது மிகவும் கடினம்.

பயணிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

முன்பதிவு செய்யும் போது சரிபார்த்தல்: ‘Book’ பொத்தானை அழுத்துவதற்கு முன், பயணிகளின் பெயர் மற்றும் வயது சரியாக உள்ளதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.

அசல் ஆவணங்களைக் கொண்டு செல்லுதல்: பயணத்தின் போது ஆதார், பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அசலை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

உடனடித் தகவல்: பிழை இருப்பது தெரியவந்தால், பயணத்தின் அன்றே டிக்கெட் பரிசோதகரிடம் சுமுகமாக நிலைமையை விளக்கி அசல் ஆவணத்தைக் காண்பிப்பது தேவையில்லாத மன உளைச்சலை தவிர்க்கலாம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top