Times of Puducherry

தமிழக அரசு 50% மானியம்; நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க இந்த தகுதிகள் இருந்தால் போதும்!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
27 Sep 2026 • 8:10 PM
Nattu Kozhi Pannai TN GOVT 50 Percentage subsidy qualification in tamil

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு செய்தல். கால்நடை பராமரிப்புத்துறை 2026-27ம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர் / பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

1. நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு. உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1,46,875) மாநில அரசால் வழங்கப்படும்.

2. திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

3. ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

4. பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

5. மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2023-24, 2024-25 மற்றும் 2025-26ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் பயனாளிகளாகவோ அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது.

6. கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.

7. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தின் கீழ் . நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்/ பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

8. விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி. 2023 -24, 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

9. தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று பயனாளிகளின் தகுதி உறுதி செய்யும் ஆவண நகல்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அவர்களால் இறுதி செய்யப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பொதுமக்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி விண்ணப்பங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top