Times of Puducherry

நபார்டு நிதி ரூ.90.56 கோடியை விரைவில் விடுவிக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 7:46 PM
mulladi-nabard fund-release

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் சித்தார்த், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், நிதித்துறை (வழிவகை) கண்காணிப்பாளர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் நபார்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் மற்றும் பாசனத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் வகையில் நபார்டு வங்கி நிதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக்கொண்டார்.

ஏனாமில் டாக்டர் ஒய்.எஸ்.ஆர். பிரெஞ்சு கால்வாய் மற்றும் அடவிபோலம் கால்வாயை தீவு எண்-3 வரை நீட்டித்து, கனகாலபேட்டை, பீம் நகர், பரம்பேட்டை, தரியாலத்திப்பா ஆகிய கிராமங்களில் உள்ள எஸ்.சி. வயல் தொழிலாளர் சங்க நிலங்களுக்கு துணைக் கால்வாய்கள் அமைக்கும் பணிக்கு ரூ.31.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளாறு கொம்யூன் வளத்தமங்கலம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சம்ப், பம்ப் ஹவுஸ், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.6.34 கோடியும், முப்பேத்தங்குடி கிராமத்தில் இதேபோன்ற பணிகளுக்கு ரூ.5.08 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதலியார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வழங்கல் அமைப்பை மேம்படுத்த ரூ.21.53 கோடியும், நெல்லித்தோப்பு மண்டலத்தில் அண்ணாநகர், டி.ஆர்.நகர், வேல்முருகன் நகர், கோசப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் விநியோக அமைப்பை புதுப்பிக்க ரூ.26.24 கோடியும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.90.56 கோடி மதிப்பிலான இத்திட்டங்களுக்கான நபார்டு நிதியை விரைவில் விடுவித்து, பணிகளை துரிதமாக தொடங்குவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top