Times of Puducherry

தமிழக அரசு காலை உணவு திட்டம் விரிவாக்கம் - தமிழ்நாடு காங்கிரஸ் பாராட்டு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
23 Sep 2026 • 12:47 PM
morning breakfast scheme

த.வெ.க.வின் கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டிய தமிழக முதலமைச்சர் . ஜோசப் விஜய் க்கு நன்றி தெரிவிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்க தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

ஏழை பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிழைப்பிற்காக கூலி வேலைக்கு அனுப்பி வந்தனர். இதை தடுப்பதற்காக மதிய உணவு திட்டத்தை 1956-57 ஆம் கல்வியாண்டில் முதலமைச்சர் காமராஜர் அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் காமராஜர் அவர்கள் பேசும் போது: “கடையர் எப்படி கரை தேர முடியும், கல்வி பெற்றால் தான் தேருவார்கள்” படிக்கிற கல்வியால் அறிவும், திறமையும் வளர்ந்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள், மனிதர்களாக மாறுவார்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு எழுத்தறிவே கிடையாது. ஊரில் பள்ளிக்கூடமே இல்லாத போது, எப்படி எழுத்தறிவு வரும் ? நாட்டில் நமது முதல் வேலை எல்லா ஊர்களுக்கும் பள்ளிக்கூடம் கட்டுவதாகும். அனைவரும் படிக்கும்படி கல்வியை இலவசமாக்க வேண்டும். நிலம் ஈரமாக இருந்தால் பயிரிடலாம். காய்ந்து கிடந்தால் எதை பயிரிடுவது ? குழந்தைகள் வயிறு காய்ந்திருக்கையில், பாடம் சொல்லிக் கொடுத்தால் ஏறுமா ? எனவே, பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதன் மூலம் கல்வியில் புரட்சி செய்யலாம். இந்த திட்டம் வெற்றி பெற மத்த எல்லா வேலையையும் ஒதுக்கி விட்டு, ஊர் ஊராகப் போய் மதிய உணவுத் திட்டத்திற்கு பிச்சை எடுக்கவும் சித்தமாக உள்ளேன்’ என்றார். அவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தினால் பகல் உணவு தந்த பகலவன் என்று முதலமைச்சர் காமராஜரை தந்தை பெரியார் பாராட்டினார்.

இந்தப் பின்னணியில் தான் தமிழ்நாட்டில் இலவச கல்வியும், மதிய உணவு திட்டமும் கொண்டு வரப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது.

இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15.30 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூபாய் 217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. த.வெ.க.வின் கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டிய தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, இத்திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top