Times of Puducherry

காவிரியாற்றின் வடிகால் மாநிலமாக தமிழகத்தை நடத்தி வருவதை எந்தவகையிலும் ஏற்க முடியாது - மாணிக்கம் தாகூர்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 10:53 PM
manik tagore-kavari

காவிரியிலிருந்து உரிய நீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா விவசாயிகள் ஒரு சாகுபடியை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்து அணை நிரம்பி வழிகிற போது தண்ணீரை திறந்து விடுவதும், பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை திறந்து விடாமலும் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதன்படி பார்த்தால் கர்நாடக அரசு காவிரியாற்றின் வடிகால் மாநிலமாக தமிழகத்தை நடத்தி வருகிறது. இதை எந்தவகையிலும் ஏற்க முடியாது. எனவே, பற்றாக்குறை காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை திறந்தால் மட்டுமே உரிய நீர் தமிழகத்திற்கு கிடைக்கும்.

தமிழகத்திற்கு நீர் தேவை அதிகம் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் கோரிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கருத்தில் கொள்வதில்லை. பற்றாக்குறை நீர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் இதுவரை எடுத்ததில்லை. எனவே, விகிதாச்சார அடிப்படையில் 20 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையாக உள்ளது. அந்த நீரை திறப்பதற்கு உரிய உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிப்பது கிடையாது. குறிப்பாக இந்த விவகாரத்தில் முதலில் 12,000 கனஅடி வீதம் நீரை திறக்க உத்தரவிட்டார்கள். அதன்பிறகு 9,000, இறுதியாக 6,000 கனஅடியாக நீரின் அளவு குறைக்கப்பட்டது. ஆனால், இதை ஒன்றைக்கூட கர்நாடக அரசு பின்பற்றவில்லை.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற போது காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஆணையம் ஏற்றுக் கொண்டது. எனவே, அதனடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 4,000 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டுமென்று கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என்று முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியிருப்பது, நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முடிவுகளை உதாசீனப்படுத்துகின்ற வகையில் இருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இத்தகைய பேச்சுக்களினால் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நல்லுறவு சீர்குலைக்கப்பட்டு, இந்த மோதல் போக்கின் காரணமாக கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை திரு. டி.கே. சிவக்குமார் அவர்கள் உணர வேண்டும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top