Times of Puducherry

எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
24 Sep 2026 • 1:49 PM
madras-high-court-dismisses-plea-to-ban-resigned-mlas-from-contesting-elections

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஏழு அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் மக்கள் தீர்ப்பை புறக்கணித்து, அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரியும், வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.அருள்முருகன் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதிடும் பொழுது, “எந்த காரணமும் இல்லாமல் இரண்டு வாரங்களில் ராஜினாமா செய்து விட்டு வேறொரு கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தல் செலவுக்கு பொறுப்பாகும் வகையில் தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும். அதற்கு எந்த சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். சட்டத்திருத்தம் கொண்டு வராவிட்டால் அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால் என்ன ஆவது” என்று வாதிடப்பட்டது. 

தேர்தல் ஆணையம் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்த பங்கும் இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல” என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. “இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் திருத்தம் கோரிய மனுவையும், 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிடுவதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் மட்டுமே சட்டம் இயற்ற முடியும் என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top