Times of Puducherry
சிவகங்கை திருப்பத்தூர் த.வெ.க எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க-வின் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை விட ஒரே ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சீனிவாச சேதுபதி, 83, 375 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், 83,374 வாக்குகளைப் பெற்றிருந்தார். இதனால், சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் ஆணையம் அவருக்கு வழங்கியது. இந்த வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் தான் தோல்வியடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, த.வெ.க எம்எல்ஏ சீனிவாச சேதுபதி தரப்பில், தொகுதிகள், எண் அடிப்படையில் மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. பெயர் அடிப்படையில் அல்ல. தபால் வாக்குகளின் உறைகளில், தொகுதி எண், பெயர், மாவட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒரு தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் வழக்கில் கூறியுள்ளதற்கு எந்த அடிப்படையும் இல்லை என வாதிடப்பட்டிருந்தது. தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற த.வெ.க எம்.எல்.ஏ-வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தி.மு.க வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்புக்காகஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மனுவை ஏற்று, தி.மு.க வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.