Times of Puducherry
Kisan Vikas Patra Scheme: நீங்கள் செய்யும் முதலீடு இரட்டிப்பாக திரும்ப கிடைக்க வேண்டுமா? ஆம் என்றால் “கிசான் விகாஸ் பத்திரம்” சிறந்த தேர்வாக இருக்கும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Kisan Vikas Patra Scheme
“கிசான் விகாஸ் பத்திரம்” என்பது இந்திய அஞ்சல் துறை மற்றும் குறிப்பிட்ட வங்கிகளால் வழங்கப்பட்டு வரும் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். மத்திய அரசின் உத்திரவாதத்துடன் இயங்கி வரும் இந்த திட்டம், எந்தவித ஆபத்தும் இல்லாமல் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. இந்த திட்டத்தின் முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
“கிசான் விகாஸ் பத்திரம்” திட்டத்தின் முக்கிய அம்சமானது, நீங்கள் செய்யும் முதலீட்டுத் தொகை குறிப்பிட்ட காலத்தில் இரண்டு மடங்காக மாறும். தற்போது நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தின் படி சுமார் 115 மாதங்கள் அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீட்டுத் தொகை ரூ.100-ன் மடங்குகளில் மட்டுமே செய்ய முடியும்.
வட்டி விகிதம்
தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.5 ஆகும். இது கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. மத்திய அரசு காலாண்டுக்கு ஒரு முறை சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கும். இருப்பினும் நீங்கள் கணக்கு தொடங்கும் நாளில் என்ன வட்டி விகிதம் உள்ளதோ அதுவே முதிர்வு காலம் வரை தொடங்கும்.
வயது வரம்பு
18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் சேரலாம். ஒரு தனிநபர் தனது பெயரில் கணக்கு தொடங்கலாம் அல்லது அதிகமாக மூன்று நபர்கள் இணைந்து கூட்டாகவும் கணக்கு தொடங்கலாம். பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம். பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் கணக்கு தொடங்க முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அமைப்புகள் அல்லது அறக்கட்டளைகள் இதில் முதலீடு செய்ய முடியாது.
முன் முதிர்வு காலம்
இந்த திட்டத்தில் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும் என்றாலும் அவசர தேவைகளுக்காக இடையில் பணம் எடுக்க சில விதிகளுக்கு உட்பட்டு அனுமதி உண்டு. முதலீடு செய்த இரண்டரை ஆண்டுகள் கழித்து கணக்கை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் அதற்கு முன்பாகவும் கணக்கை முடிக்கலாம்.
இதர முக்கிய நன்மைகள்
வங்கிகளில் கடன் பெறும் பொழுது இந்த பத்திரத்தை பிணையமாக அடமானம் வைக்கலாம். இக்கணக்கை ஒரு அஞ்சலகத்திலிருந்து மற்றொரு அஞ்சலகத்திற்கு அல்லது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் முதலீட்டுக்கு 100% பாதுகாப்பு உண்டு.
கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்
ஆரம்பத்தில் இது தாள்களாக (பேப்பர் சர்டிபிகேட் ஆக) வழங்கப்பட்டது. ஆனால் தற்போது எலக்ட்ரானிக் பாஸ்புக் வடிவில் வழங்கப்படுகிறது. அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது பொதுத்துறை வங்கிகளுக்கு சென்று நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.