Times of Puducherry
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக 2-வது டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு மாத காலமாக பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மையத்தில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளை மேற்கொண்டு வந்த வருண் சக்ரவர்த்தி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் களத்திற்குத் திரும்பினார். செப்டம்பர் 13-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில், 4 ஓவர்கள் பந்துவீசிய அவர், 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடைபெற்று வரும் டி20 சர்வதேசத் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்பதும் சந்தேகமாகியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள கவலின்படி, வருண் சக்கரவர்த்தி, உடலின் பக்கவாட்டுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை உடனடியாக அணியில் இருந்து விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வருண் சக்கரவர்த்தி புதன்கிழமை பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்று அங்குள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மருத்துவக் குழுவைச் சந்திக்க உள்ளார். அதன்பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வதற்கு முன்பு, சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மருத்துவக் குழுவினர் வருண் சக்கரவர்த்திக்கு ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்திய அணி ஜப்பானுக்குப் புறப்படுவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ளது.
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி, அதற்கு முன்பாக போட்டியை நடத்தும் ஜப்பான் அணிக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி செப்டம்பர் 18ஆம் தேதி புதுடெல்லியில் இருந்து ஜப்பானுக்கு புறப்படுகிறது. எனவே, வருண் சக்கரவர்த்தி காயத்தில் இருந்து மீண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தக் குறுகிய கால அவகாசம் போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.