Times of Puducherry

காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு மாணவர் சேர்க்கை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
24 Sep 2026 • 10:02 PM
KANJIMAMUNIVAR

புதுச்சேரி, இலாஸ்பேட்டையில் அமைந்துள்ள காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி இன்று(24.09.2026) நடைபெற்றது. இதுவரை புதுவைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் முனைவர் பட்ட வகுப்புகள் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வந்தன.

புதுவைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமே ஆராய்ச்சி மாணவர்களை நுழைவுத் தேர்வு நடத்தித் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அண்மையில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் படிப்பதற்குரிய மாணவர்களுக்கு உரிய நுழைவுத் தேர்வை இந்த நிறுவனம் நடத்தி, தேர்ச்சி முடிவை வெளியிட்டது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 96 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 13 மாணவர்கள் தேசியத் தகுதித் தேர்வு (NET) எழுதி வெற்றிபெற்றவர்கள் என்பதால் தேர்வு எழுதுவதிலிருந்து அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், மனையியல், தாவரவியல், வணிகவியல், புள்ளியியல், சுற்றுலாவியல், பொருளாதாரத் துறைகளைச் சார்ந்த 75 மாணவர்கள் மட்டும் நுழைவுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்களிலிருந்து இந்த ஆண்டு 38 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வுசெய்யத் தேர்வாகி உள்ளனர்.

முனைவர் பட்ட ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 38 ஆய்வு மாணவர்களுக்கு உரிய சேர்க்கை அனுமதியை இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கி, அரசு உயர்கல்விக்கு அளித்துவரும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தக்க வைத்துக்கொள்ள திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடுதல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தல், புதியதாகக் கட்டப்பட்டுவரும் கல்லூரிக் கட்டடங்களைப் பார்வையிடல், நிறுவனத்தில் அமைந்துள்ள மீன் பண்ணையைப் பார்வையிடல், மகளிருக்கான புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகளைத் திறந்துவைத்தல், நிறுவனத்தின் செய்தி மடலினை வெளியிடுதல், ஒரு மரம் – ஒரு உறுதிமொழியேற்றல் முதலிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ் வரவேற்புரை வழங்கினார். ஆராய்ச்சிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மேரி ஜோசபின் அருணா நன்றியுரை வழங்கினார். மனையியல் துறைத்தலைவர் அலமேலு மங்கை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top