Times of Puducherry

அதிகரிக்கும் பணவீக்கம், விண்ணை முட்டும் விலைவாசி.! செலவுகளை கட்டுப்படுத்த நடுத்தர குடும்பங்களுக்கான 6 டிப்ஸ்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 2:45 PM
inflation-cost-of-living-middle-class-family-financial-management-6-step-plan

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை எதிர்கொள்ள நடுத்தர குடும்பங்கள் தங்கள் நிதி நிர்வாகத்தை மறு சீரமைப்பது மிகவும் அவசியமாகும். பண வீக்கத்திலிருந்து தப்பிக்க உதவக்கூடிய முக்கிய டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

50-30-20 விதி

உங்கள் மாதாந்திர வருமானத்தை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்க வேண்டும். இதற்கு 50-30-20 விதி உதவும்.

  1. அத்தியாவசிய செலவுகள்(50%): வீட்டின் வாடகை, மளிகை சாமான்கள், பள்ளிக் கட்டணம், மின்சாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு உங்கள் மாதாந்திர வருமானத்திலிருந்து 50% எடுத்து ஒதுக்க வேண்டும்.
  2. விருப்பச் செலவுகள்(30%): வெளி உணவகங்கள், வார இறுதி கேளிக்கைகள், உடைகள் மற்றும் பிற செலவுகளுக்காக 30% ஒதுக்க வேண்டும். 
  3. சேமிப்பு மற்றும் முதலீடு(20%): பண வீக்கத்தை விட அதிக லாபம் தரும் முதலீடுகள் மற்றும் சேமிப்புகளுக்காக 20% பணத்தை எடுத்து வைக்க வேண்டும்.

செலவுகளைக் குறைத்தல்

வார இறுதியில் வெளி உணவகங்களில் சாப்பிடுவதை குறைத்து வீட்டிலேயே சமைப்பதை அதிகரிக்க வேண்டும். பயன்படுத்தப்படாத ஓடிடி, மியூசிக் ஆப், மற்றும் பிற ஆப் சந்தாக்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் தேவையில்லாத பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆஃபர் என்கிற பெயரில் டிஜிட்டல் தளங்களில் விற்பனையாகும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும்.

ஸ்மார்ட் மளிகை & வீட்டு நிர்வாகம்

அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் 10% முதல் 15% வரை பணத்தை மிச்சப்படுத்தலாம். பயன்பாட்டில் இல்லாத மின் சாதனங்களை அணைப்பது, எல்இடி பல்புகளை பயன்படுத்துவது, சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் மாதாந்திர மின்கட்டணத்தை குறைக்கலாம். பெரிய சூப்பர் மார்ட்களை விட உள்ளூர் உழவர் சந்தைகளில் காய்கறிகளை வாங்கலாம்.

கடன் மற்றும் EMI-களை சீரமைத்தல்

கிரெடிட் கார்டு நிலுவைகள் மற்றும் தனிநபர் கடன்களை அடைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். வெகுமதிகளுக்காக தேவையில்லாத செலவு செய்யக்கூடாது. எந்த ஒரு எதிர்பாராத செலவுகளுக்கும் மருத்துவம் அல்லது வேலை இழப்புக்கு மூன்று முதல் ஆறு மாத குடும்ப செலவுகளுக்கான தொகையை சேமித்து வைக்க வேண்டியது அவசியம். சாதாரண வங்கி சேமிப்பு கணக்கில் வைக்கும் பணம் பண வீக்கத்தால் அதன் மதிப்பை இழக்கும். எனவே நீண்ட கால அடிப்படையில் பண வீக்கத்தை முறியடிக்க ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட், Nifty 50 Index Funds, PPF, அல்லது SIP போன்ற திட்டங்களில் முதலீடுகள் செய்யலாம்.

மாதிரி கணக்கீடு

உங்கள் மாதாந்திர வருமானம் ரூ.45,000 என வைத்துக் கொண்டால் வீட்டு வாடகை ரூ.12,000, மளிகை மற்றும் காய்கறிகள் ரூ.10,000, மின்சாரம், கேஸ் மொபைல் ரூ.5,000, பள்ளிக்கட்டணம், மருத்துவம் ரூ.5,000, விருப்ப மற்றும் கேளிக்கைச் செலவுகள் ரூ.3,000, உடைகள் மற்றும் இதர பொருட்கள் ரூ.2,500 என செலவிடலாம். ரூ.45,000-ல் செலவுகள் ரூ.37,500 போக மீதமுள்ள ரூ.7,500-ஐ அவசரகால நிதிக்கும், சேமிப்பிற்கும் ஒதுக்குவது நல்லது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top