Times of Puducherry
46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள சமர்கண்ட் நகரில் இன்று (செப்டம்பர் 15) முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், சமர்கண்ட் நகருக்கு சென்றடைந்த இந்திய செஸ் அணியினருக்கு, தங்குமிட வசதி கிடைப்பதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்து பல மணிநேரங்கள் ஆகியும் பல வீரர்களுக்கு இன்னும் ஹோட்டல் அறைகள் கிடைக்கவில்லை.
உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவினர் ஹோட்டலுக்கு முன்பதிவு விவரங்களை அனுப்பத் தவறியதால், பல வீரர்களுக்கு இன்னும் அறைகள் ஒதுக்கப்படவில்லை என்பதை ஆண்கள் அணியின் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் உறுதிப்படுத்தினார். "ஹோட்டலில் முன்பதிவு வரம்பு மீறிவிட்டதாகவும் (overbooked), உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவினர் ஹோட்டலுக்கு முன்பதிவு விவரங்களை அனுப்பவில்லை என்றும் எங்களிடம் கூறப்பட்டது," என்று அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த அணி 'சில்க் ரோடு பை மினியோன்' (Silk Road by Minyoun) ஹோட்டலில் தங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த செய்தி வெளியாகும் நேரத்தில், சில வீரர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், இன்னும் சில வீரர்கள் தங்குமிட வசதி இன்றி தவிக்கும் நிலை நீடிக்கிறது.
இதனிடையே, "உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெறவுள்ள 2026 ஒலிம்பியாட் குறித்த ஆரம்பக்கட்ட அபிப்பிராயம் மிகவும் மோசமாக உள்ளது. இன்னும் காத்திருக்கிறேன்," என்று கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்தியும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியில் தற்போதைய உலக சாம்பியன் டி. குகேஷ், 2026-ஆம் ஆண்டுக்கான மகளிர் கேண்டிடேட்ஸ் (Women’s Candidates) தொடரின் வெற்றியாளர் ஆர். வைஷாலி மற்றும் கிராண்ட் செஸ் டூர் (Grand Chess Tour) மற்றும் நார்வே செஸ் (Norway Chess) சாம்பியனான ஆர். பிரக்ஞானந்தா ஆகியோர் முக்கிய இடம்பெற்றுள்ளனர்.
'ஓபன்' பிரிவிற்கான அணியில் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நிஹால் சரின் மற்றும் குஜராத்தி ஆகியோர் உள்ளனர். மகளிர் அணியில் வைஷாலி, கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் மற்றும் சவிதா ஸ்ரீ பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்; இந்த அணிக்கு ஸ்வயம் மிஷ்ரா கேப்டனாகச் செயல்படுகிறார்.
2024-ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டிகளில் 'ஓபன்' (Open) மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டைத் தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, நடப்புச் சாம்பியனாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.