Times of Puducherry
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய வீராங்கனைகள் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, மகளிர் ஆசியக் கோப்பையை 8-வது முறையாக வென்று சாதனை படைத்தது. ஆனால், பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்க தயாராக இருந்த நிலையில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்ட வீராங்கனைகள் மேடைக்கு சென்று கோப்பையை பெற்றுக்கொள்ளவில்லை.
பிசிசிஐ நிர்வாகிகளை சந்தித்த நக்வி
இந்நிலையில், இறுதிப்போட்டி முடிந்த பிறகு மொஹ்சின் நக்வி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். போட்டி நடைபெற்றபோதும் நக்வி, ராஜீவ் சுக்லா மற்றும் தேவஜித் சைகியா ஆகியோருடன் ஒரே பகுதியில் அமர்ந்து போட்டியைப் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து மொஹ்சின் நக்வியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நாங்கள் அனைவரையும் சந்திப்போம்” என்று அவர் பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பரிசளிப்பு விழாவில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்தியிலும் பிசிசிஐ நிர்வாகிகளுடனான சந்திப்பு வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
‘கோப்பை யார் வழங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல’
இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவும் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஆடவர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணி எடுத்த முடிவுக்கு மகளிர் அணியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். மேலும், இந்திய வீராங்கனைகள் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளாத விவகாரத்தைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் சைகியா தெரிவித்துள்ளார்.
“கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பதில் எங்களின் கவனம் இருக்கவில்லை. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். அந்த இலக்கை அடைந்துவிட்டோம்” என்று சைகியா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், கடந்த ஆண்டு ஆடவர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட கோப்பை வழங்கும் சர்ச்சையை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் மற்றும் இரு நாடுகளின் உறவுகள் தொடர்பான விவாதத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.