Times of Puducherry
பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா போன்ற உலர் கொட்டைகளில் இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. இவை காற்று, வெப்பம், வெளிச்சம் மற்றும் ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும்போது பின்வரும் ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன
கொழுப்பு ஆக்சிஜனேற்றம்
காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் கொழுப்பு வினைபுரிந்து, உலர் பழங்களின் இயல்பான சுவையையும் வாசனையையும் மாற்றுகிறது.
ஈரப்பதம் உறிஞ்சுதல்
சூழலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதால், இவை தங்களின் மொறுமொறுப்பை இழந்து மென்மையாகின்றன. அதிக ஈரப்பதம் தொடர்ந்தால் பூஞ்சை காளான்கள் உருவாகக் கூடும்.
பல்வேறு உலர் பழங்களின் தோராயமான ஆயுட்காலம்
பாதாம்: அறை வெப்பநிலையில் 1–2 மாதங்கள் | ஃப்ரிட்ஜில் 6 மாதங்கள் | ஃப்ரீசரில் 1 ஆண்டுக்கும் மேல்.
முந்திரி: அறை வெப்பநிலையில் 1 மாதம் | ஃப்ரிட்ஜில் 6 மாதங்கள் | ஃப்ரீசரில் 1 ஆண்டு வரை.
வால்நட்: (அதிக கொழுப்புச்சத்து கொண்டதால் வெப்பத்தைத் தவிர்க்க வேண்டும்) அறை வெப்பநிலையில் 1 மாதம் | ஃப்ரிட்ஜில் 6 மாதங்கள் | ஃப்ரீசரில் 1 ஆண்டு வரை.
பிஸ்தா: அறை வெப்பநிலையில் 1–2 மாதங்கள் | ஃப்ரிட்ஜில் 6 மாதங்கள் | ஃப்ரீசரில் 1 ஆண்டு வரை.
உலர் திராட்சை: அறை வெப்பநிலையில் 1–2 மாதங்கள் | ஃப்ரிட்ஜில் 6 மாதங்கள் வரை.
பேரீச்சம்பழம்: அறை வெப்பநிலையில் 1 மாதம் | ஃப்ரிட்ஜில் 6 மாதங்கள் வரை.
எந்த வகையான பாத்திரத்தைப் பயன்படுத்தலாம்?
பாத்திரம் எந்தப் பொருளால் செய்யப்பட்டது என்பதை விட, அது எவ்வளவு இறுக்கமாக மூடுகிறது என்பதே முதன்மையானது.
கண்ணாடி பாத்திரம் நீண்ட நாள் சேமிப்பிற்கு மிகச் சிறந்தது. உணவின் வாசனையை உறிஞ்சாது, எளிதில் சுத்தப்படுத்தலாம்.
எவர்சில்வர் பாத்திரம் வெளிச்சம் உள்ளே செல்வதைத் தடுக்கும், நீடித்து உழைக்கும். ஆனால் மூடி காற்றுப் புகாதவாறு இறுக்கமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் பாத்திரம் உணவுப் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான பிளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்தலாம். சாதாரண பிளாஸ்டிக் டப்பாக்களைத் தவிர்ப்பது நல்லது.
ஃப்ரிட்ஜில் சேமிப்பதா? வெளியே வைப்பதா?
1–2 மாதப் பயன்பாட்டிற்கு குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் உள்ள அலமாரியில் வைத்தாலே போதுமானது.
6 மாதங்கள் அல்லது கோடைக் காலத்திற்கு ஃப்ரிட்ஜில் வைப்பது சிறந்தது. குறிப்பாக வால்நட் போன்ற கொட்டைகளை குளிர்ச்சியான சூழலில் வைப்பது அதன் தரத்தைப் பாதுகாக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மற்ற உணவுகளின் வாசனை பரவாமல் இருக்கவும், ஈரப்பதம் உள்ளே செல்லாமல் இருக்கவும் டப்பாவை நன்றாக மூடி வைக்க வேண்டும்.
மழைக்காலப் பராமரிப்பு குறிப்புகள்
அதிக அளவில் வாங்கிச் சேமிப்பதைத் தவிர்த்து, குறுகிய கால தேவைகளுக்கு ஏற்ப வாங்குவது நல்லது.
சமையல் அடுப்பு மற்றும் சிங்க் அருகில் வைப்பதையோ, ஈரமான கரண்டிகளைப் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
தினமும் பயன்படுத்தும் அளவை தனி சிறிய டப்பாவிலும், மீதியை பெரிய டப்பாவிலும் வைத்துப் பயன்படுத்தினால், பிரதான இருப்பு அடிக்கடி காற்றுடன் தொடர்பு கொள்வது தடுக்கப்படும்.
வாரம் ஒருமுறை உலர் பழங்களில் நிறம், வாசனை அல்லது ஈரம் ஏதேனும் மாறியுள்ளதா எனப் பரிசோதிக்க வேண்டும்.
கெட்டுப்போனதை எவ்வாறு கண்டறிவது?
வழக்கத்திற்கு மாறாக கசப்புத் தன்மை தெரிந்தால் அது கெட்டுப்போனதற்கான அறிகுறியாகும்.
பழைய எண்ணெய் அல்லது கெமிக்கல் வாசனை அடித்தால் உட்கொள்ளக் கூடாது.
வெள்ளை அல்லது பச்சை நிற பூஞ்சைக் காளான் தென்பட்டாலோ, சிறிய பூச்சிகள் மற்றும் வலை போன்ற அமைப்பு இருந்தால் அந்த முழு நட்ஸையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.