Times of Puducherry
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் யூ பி எஸ் சி மையத்தை திறந்து வைத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ் காதல் பேசியதாவது:
இளைஞர்களின் கனவுகளுக்கு ஒரு புதிய கதவைத் திறக்கும் விதமாக ஒரு பயிற்சி மையத்தை தொடங்குவது என்பது மிகப் பெரிய சமுதாயப் பொறுப்புணர்வு. இதை ஒரு பயிற்சி மையமாக நான் பார்க்கவில்லை. புதுச்சேரி இளைஞர்களின் கனவுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பாலமாக நான் பார்க்கிறேன். புதுச்சேரியில் இருக்கும் திறமையான இளைஞர்களை நாட்டின் நிர்வாகத் தலைமைப் பொறுப்புகளுக்குக் கூட்டிச் செல்லும் ஒரு பாதையாக பார்க்கிறேன்.
UPSC தேர்வுகள் என்பது இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்று. ஆனால் அதே நேரத்தில், அது நாட்டுக்குச் சேவை செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்று. IAS, IPS, IFS உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளில் சேரும் இளைஞர்கள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் மாற்றி அமைக்கும் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கிறார்கள். அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஒரு அதிகாரி, ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்க முடியும். அதனால்தான் UPSC தேர்வு என்பது வெறும் ஒரு வேலைக்கான தேர்வு அல்ல. அது நாட்டை உருவாக்கும் பணிக்கான ஒரு அழைப்பு.
நான் ஒரு IAS அதிகாரியாக பணியாற்றிவன் என்பதால் என்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.(வாழ்க்கை அனுபவம் – தொடக்கத்தில் பேராசிரியராக இருந்தது. அதன் பிறகு IAS அதிகாரியாக பணியில் சேர்ந்தது. குஜராத் மாநிலத்தில் IAS அதிகாரியாக சுமார் 45 ஆண்டுகள் பணியாற்றியது. பணியாற்றிய காலத்தில் எடுத்த சில முடிவுகள் மாற்றங்களுக்கு வழி வகுத்தது)
புதுச்சேரியைப் பற்றி நாம் பெருமைப்படுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று கல்வி. அளவில் சிறயதாக இருந்தாலும் புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், என்று மிகப்பெரிய கல்வி கட்டமைப்பு இருக்கிறது. புதுச்சேரி ஒரு கல்வி கேந்திரமாக பார்க்கப்படுகிறது. இங்கே இருக்கும் இளைஞர்கள் சுமார் 75 % உயர்கல்வி படிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள். அவர்களிடம் அறிவு இருக்கிறது. திறமை இருக்கிறது. கனவு இருக்கிறது. வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. முக்கியமாக, சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருக்கிறது. ஆனால் இங்கே ஒரு கேள்வி நம் முன்னே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இத்தனை ஆயிரம் இளைஞர்கள் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் UPSC போன்ற தேசிய அளவில் போட்டித் தேர்வுகளை எழுதுகிறார்கள்? எத்தனை பேர் IAS, IPS, IFS போன்ற உயர்ந்த குடிமைப் பணியில் சேர்கிறார்கள்? இந்தக் கேள்வி என்னுடைய மனதில் இருக்கிறது.
நான் ஒரு IAS அதிகாரியாக பணியாற்றியதாலோ என்னவோ நான் நிர்வாகியாக பொறுப்பு ஏற்று இருக்கும் இந்த புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அதிகமான இளைஞர்கள் IAS, IPS போன்ற குடிமைப் பணிகளில் சேர வேண்டும் என்ற ஒரு தனிப்பட்ட விருப்பம் எனக்கு எப்போதும் இருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்கும்போதுகூட என்னுடைய இந்த எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். “புதுச்சேரி இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது; நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் அதிகாரிகளாகவும் உருவாக வேண்டும்” என்பது என் விருப்பம். UPSC தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கான சிறந்த சூழ்நிலை புதுச்சேரியில் உருவாக வேண்டும்.
ஒரு இளைஞர் தொலைதூர நகரத்திற்குச் செல்லாமல், புதுச்சேரியிலேயே நல்ல பயிற்சி பெறும் அளவில் பயிற்சி மையங்கள் உருவாக வேண்டும். அப்படிப்பட்ட சூழலை உருவாக்கும் ஒரு முயற்சியாகத்தான் இந்த மையம் திறக்கப்படுவதை நான் பார்க்கிறேன். UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு படிப்பு அறிவு மட்டுமல்ல, சரியான வழிகாட்டுதல், பயிற்சி, நாட்டு நடப்புகள் குறித்த அறிவு, நேர மேலாண்மை, மன உறுதி ஆகிய அனைத்தும் தேவை. அப்படிப்பட்ட ஒரு முழுமையான பயிற்சி தரும் மையமாக இது உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஒரு சமுதாய சேவை எண்ணத்தோடு இந்த UPSC பயிற்சி மையத்தை தொடங்கி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் திரு. சார்லஸ் மார்ட்டின் அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஏனென்றால், இளைஞர்கள் நாட்டிற்கு சேவை ஆற்றும் உயர்வான கனவு காணும் வாய்ப்பை உருவாக்கித் தருவது ஒரு சமுதாயப் பணி. நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நம்மிடம் இருக்கும் செல்வம், அறிவு, திறமை எல்லாம் நமக்கு பயன்பட்டால் மட்டும் போதாது. சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மனித குலத்தின் மேன்மைக்கும் பயன்பட வேண்டும். அப்படிப்பட்ட உயர்ந்த எண்ணத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டு இருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன். அதற்காக அவரையும் அவருக்கு உதவியாக இந்த சமுதாயப் பணியில் ஈடுபட்டு இருக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
எனக்கு ஒரு கனவு இருக்கிறது. ஒரு நாள் டெல்லியில் UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்…வெளியாகும்போது, அதில் புதுச்சேரியைச் சேர்ந்த பல இளைஞர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும். ஒருவர் அல்ல. பலர். ஒரு வருடம் அல்ல. ஒவ்வொரு வருடமும். அப்போது, “நான் புதுச்சேரியின் ஆளுநராக இருந்தேன்” என்று பெருமையோடு சொல்ல முடியும். அந்த நாள் வெகு தூரத்தல் இல்லை என்ற நம்பிக்கையோடு என்னுடைய உரையை முடிக்கிறேன் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.