Times of Puducherry
ஒரு காலத்தில் கரண்ட் பில் கட்டுவதற்கு மின்வாரிய அலுவலகங்களில் மணி கணக்கில் நின்ற காலம் போய், இன்று கைபேசியிலேயே சில வினாடிகளில் கட்டணம் செலுத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டோம். அரசு மற்றும் தனியார் மின் விநியோக நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் சேவைகள் மக்களுக்கு பெரும் வசதியாக இருந்தாலும், இதையே சாதகமாகப் பயன்படுத்திப் பணத்தைப் பறிக்கும் இணையவழிக் குற்றங்களும் (Cyber Crimes) நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சமீபகாலமாக, “உங்கள் மின் கட்டணம் நிலுவையில் உள்ளது. உடனடியாக இந்த லிங்க்கைக் கிளிக் செய்து கட்டணம் செலுத்தாவிட்டால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என்று மொபைல் போன்களுக்கு அச்சுறுத்தும் குறுஞ்செய்திகள் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன.
மின் கட்டணப் போர்வையில் நடக்கும் மோசடி நாடகம்
மோசடி கும்பல்கள் அசல் மின்சார வாரியத்தின் முகப்பை அப்படியே ஒத்திருக்கும் போலி இணையதளங்களையோ அல்லது ஆண்ட்ராய்டு செயலிகளையோ உருவாக்குகின்றன.
பயமுறுத்தல் தந்திரம்
மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் நுகர்வோர் தங்களின் நுகர்வோர் எண், வங்கி விவரங்கள் அல்லது கிரெடிட்/ டெபிட் கார்டு விவரங்களை அந்தப் போலி தளங்களில் பதிவிடுகின்றனர்.
இந்த விவரங்களை சாதுரியமாகத் திருடும் ஹேக்கர்கள், பயனர்களின் மொபைலுக்கு வரும் ஓடிபி -யைப் பெற்று கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் நொடியில் சுருட்டி விடுகின்றனர். சமீபத்தில் இதுபோன்ற போலி லிங்கை நம்பி ஒரே கிளிக் செய்த வாடிக்கையாளர் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்த பெருந்தொகையை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணைய குற்ற துறை வழங்கும் 5 வழிகள்
எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் எந்தவொரு தனிநபர் எண்களின் லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்.
அதிகாரப்பூர்வ அரசு மின்வாரிய தளங்களின் முகவரி எப்போதும் .gov.in என்ற டொமைனில் மட்டுமே முடியும்.
“இப்போதே பில் கட்டாவிட்டால் கரண்ட் கட் செய்யப்படும்” என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.
வங்கி கணக்கு எண், கார்டு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி -களை எக்காரணம் கொண்டும் பிறரிடம் கூறக் கூடாது.
பாதுகாப்பாக மின் கட்டணம் செலுத்துவது எப்படி?
இந்தியாவில் உள்ள மின்சார வாரியங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலிகளை வைத்துள்ளன. நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் அந்த அதிகாரப்பூர்வ செயலி அல்லது மின்வாரிய தளங்களுக்கு நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்தலாம்.
அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ்கள்
அரசின் BHIM, அல்லது NPCI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கூகிள் பே, போன்பே, பேடிஎம் போன்ற நம்பகமான யுபிஐ செயலிகள் மூலம் செலுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது.
பணம் பறிபோனால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்திருந்தால், பதற்றமடையாமல் உடனடியாகச் செயல்பட வேண்டும்.
உடனடியாக இந்தியாவின் தேசிய சைபர் குற்ற உதவி எண்ணான 1930- ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்.
ஆன்லைன் புகார்: cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் உடனடியாகப் புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு முடக்கம்: உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட கார்டு அல்லது யுபிஐ கணக்கை முடக்குமாறு கோரவும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.