Times of Puducherry

யுபிஐ பயனர்களுக்கு குட் நியூஸ்: ரூ.2,000 வரை ஃப்ரீ... மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
15 Sep 2026 • 3:25 PM
good news for upi users transactions up to rs 2,000 to be free

இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற செயலிகள் மூலம் நாள்தோறும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் கோடிக்கணக்கான மக்களுக்கு மத்திய நிதியமைச்சகம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்கிகளோ அல்லது பேமெண்ட் சேவை நிறுவனங்களோ ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டு பயன்பாட்டிற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது?

ரூ.2,000 வரையிலான எந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் இனி எவ்வித கட்டணமும் கொடுக்க வேண்டியதில்லை. பணத்தை அனுப்புபவரிடமிருந்தோ அல்லது பெறுபவரிடமிருந்தோ நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தக் கட்டணமும் வசூலிக்க முடியாது. ரூபே கார்டைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும் போது வங்கிகளோ, பேமெண்ட் சேவை நிறுவனங்களோ கூடுதல் சேவைக்கட்டணம் விதிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பயன்படுத்தினால் கட்டணமா?

ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட பெரிய மதிப்பிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் குறைந்த அளவிலான 'வணிகர் தள்ளுபடி விகிதக் கட்டணம்' அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

பொதுமக்களுக்கு பாதிப்பா?

ஒருவேளை 'வணிகர் தள்ளுபடி விகிதக் கட்டணம்' அமலுக்கு வந்தாலும், அக்கட்டணத்தை வணிகர்களே செலுத்துவார்கள்; வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நபர் டூ நபர் பரிவர்த்தனை

ஒரு நபரின் கணக்கில் இருந்து மற்றொரு நபருக்கு அனுப்பப்படும் வழக்கமான யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் எப்போதும் போல முற்றிலும் இலவசமாகவே தொடரும்.

உலகை வியக்க வைக்கும் இந்திய யுபிஐ-ன் அசுர வளர்ச்சி

2025-ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் அறிக்கையின்படி, பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய சில்லறை விரைவு பேமெண்ட் அமைப்பாக இந்தியாவின் யுபிஐ உருவெடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 24.51 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 29.82 லட்சம் கோடி ஆகும். இந்த மொத்த பரிவர்த்தனைகளில் சுமார் 75% அளவை கூகுள் பே மற்றும் போன்பே ஆகிய இரு செயலிகளே வகிக்கின்றன.

வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி வருவாய் வாய்ப்பு?

ரூ.2,000-க்கு மேற்பட்ட பெரிய வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கொண்டுவரப்பட்டால், அது பேமெண்ட் துறைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை கூடுதல் வருவாயை ஈட்டித் தரும் என ஜெஃப்ரீஸ் (Jefferies) நிதி நிறுவனம் கணித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், சாதாரண பொதுமக்கள் அன்றாடம் செய்யும் ரூ.2,000 வரையிலான யுபிஐ மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்க முடியாது என்பது இந்தியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய நிம்மதியாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top