Times of Puducherry

2027-ல் தங்கம் விலை ஒரு சவரன் எத்தனை லட்சமாக உயரப்போகுது தெரியுமா? நிபுணர்கள் சொன்ன ஷாக்கிங் தகவல்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 3:52 PM
gold price prediction 2027 market expert forecast

2027 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என முன்னணி நிதி நிறுவனங்களும், சந்தை நிபுணர்களும் கணித்துள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2027-ல் தங்கம் விலை எப்படி இருக்கும்?

முன்பு எப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை பெரிதளவில் பாதித்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை 2027 ஆம் ஆண்டில் எப்படி இருக்கும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல்கள், பணவீக்கம், உலகளாவிய வங்கிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சந்தை கணிப்புகள்

2027-ல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,60,000 முதல் ரூ.1,90,000 வரை உயரக்கூடும் என ஐசிஐசிஐ வங்கியின் குளோபல் மார்க்கெட் கணித்துள்ளது. தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் கருத்துபடி, 2027 மார்ச் மாதத்திற்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சம் வரை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கணித்துள்ளது. ஜே.பி மார்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பின்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து $4,500 முதல் $5,000 டாலர்களை தாண்டி புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய காரணிகள்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான காரணம் மத்திய வங்கிகளின் கொள்முதல் அதிகரிப்பே ஆகும். இந்தியா, சீனா உள்ளிட்ட உலகளாவிய மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் தங்கத்தின் அளவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கும் போதும், டாலர் பலவீனம் அடையும் பொழுதும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கத்தை நோக்கி நகர்கின்றனர். மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக சரியும்பொழுது, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் உள்நாட்டு விலை இயல்பாகவே உயர்கிறது. சர்வதேச போர்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மைகள் தங்கத்தின் தேவையை அதிகரிக்கச் செய்கின்றன. 

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை நீண்ட காலத்தில் உயர்ந்தாலும் இடைப்பட்ட லாப பதிவுகளால் 3% முதல் 5% வரை தற்காலிக சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சந்தை வல்லுனர்களின் அறிவுரைப்படி, விலை குறையும் தருணங்களை பயன்படுத்தி சிறிய அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரும்.

(முக்கிய குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட கணிப்புகள் நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தை நிபுணர்களின் தற்போதைய கணிப்புகளே ஆகும். உண்மையான விலையானது அன்றைய சந்தை பொருளாதாரங்களுக்கு ஏற்ப மாறுபடும்.)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top