Times of Puducherry
பிரபல தொழிலதிபரான ‘ஜெம்ஸ் கிரானைட்ஸ்’ உரிமையாளர் ஆர்.வீரமணி (84) தொடர்பான போக்சோ வழக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதியுதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில், வீரமணி, அவரது நண்பர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிங், வீரமணியின் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்த கணேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரமணி சென்னை தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் ஜெம் வீரமணி பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், பணம், செல்போன், பரிசுப் பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்து சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குறிப்பாக இவர் ஏழ்மை மற்றும் ஆதரவற்ற சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம், இவரால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரெயிடு
வீரமணி தொடர்பான வழக்கில் நாள்தோறும் ஒவ்வொரு தகவல்களாக வெளி வந்த வண்ணம் இருக்கும் நிலையில், சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பகுதியில் உள்ள வீரமணியின் வீடு, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் நீலாங்கரை, தி.நகர் பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகம் என வீரமணிக்குச் சொந்தமான 5 இடங்களில் சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். விடிய விடிய நடந்த சோதனையில் செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு, வீரமணியின் கூட்டாளிகள் யார், யார், இந்த விவகாரத்தை மூடி மறைக்க யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக சில ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இதனை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கைமாறிய பணம்
இதனிடையே, வீரமணி தொடர்பான சொத்து விற்பனை தொடர்பான ஆவணங்கள் போலீஸாரிடம் சிக்கி இருப்பதாகவும் தெரிகிறது. சென்னை இ.சி.ஆர் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் ஜெம் வீரமணிக்குச் சொந்தமான 2 நிலங்கள் அவசரமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு நிலம் சுமார் ரூ.43 கோடிக்கும், மற்றொரு நிலம் சுமார் ரூ.36 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியை கைது செய்யாமல் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் குழு அமைத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு பணம் சென்றது, காவல் அதிகாரிகள் பணம் பெற்றார்களா? என இந்தக் குழு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நோட்டீஸ்
இந்நிலையில், பாலியல் வழக்கில் ஜெம் கிரானைட் வீரமணி சிக்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சியினருக்கு ரூ 70 கோடி வரை செட்டில்மென்ட் வழங்க உதவியதாக ரயில்வே தொழிற்சங்க (SRMU) தலைவர் கண்ணையா மகன் பிரகாஷுக்கு சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியது. ஆனால், பிரகாஷ் அவரது வீட்டில் இல்லை எனவும், தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
பிரகாஷுக்கு சம்மன் வழங்குவதற்காக அவரது இல்லத்திற்குச் சென்ற காவல்துறை குழு, அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (LOC) பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்மன்
இந்நிலையில், ஜெம் வீரமணி வழக்கை அப்போது விசாரித்த உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கை முடித்து வைத்தது ஏன்? என கேள்வி கேட்டு இந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
மனு
இந்த நிலையில், பாலியல் புகார் தொடர்பான வழக்கில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தொடர்பாக இன்று மாலை விசாரணை நடைபெற உள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.