Times of Puducherry
பிரபல தொழிலதிபரான ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் ஆர்.வீரமணி (84) தொடர்பான போக்சோ வழக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கி இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதியுதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கில், வீரமணி, அவரது நண்பர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன், வீரமணியின் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்த கணேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீரழிப்பு
வீரமணி சென்னை தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் ஜெம் வீரமணி பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், பணம், செல்போன், பரிசுப் பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்து சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குறிப்பாக இவர் ஏழ்மை மற்றும் ஆதரவற்ற சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம், இவரால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சம்மன்
இந்த வழக்கில் வீரமணி சிக்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சியினருக்கு ரூ 70 கோடி வரை செட்டில்மென்ட் வழங்க உதவியதாக ரயில்வே தொழிற்சங்க (SRMU) தலைவர் கண்ணையா மகன் பிரகாஷுக்கு சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருக்கிறது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஜெம் வீரமணி வழக்கை அப்போது விசாரித்த உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கை முடித்து வைத்தது ஏன்? என கேள்வி கேட்டு இந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு
இதேபோல், இந்த புகார் தொடர்பான விசாரணையை முறையாக மேற்பார்வையிடாத அப்போதைய சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. அருண், கண்ணன் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி (ஐ.ஜி) தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய போக்சோ வழக்கு
இந்நிலையில், ‘ஜெம் கிரானைட்’ வீரமணி மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வீரமணியால் தனது சிறுமியான மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இவ்வழக்கில் வீரமணி விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.