Times of Puducherry
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது தமிழ்நாடு அரசியல் களத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
யார் இந்த செம்மலை?
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செம்மலை. இவர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய போது திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் பயணத்தைத் தொடங்கினார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. எனவே இரட்டை இலைக்கு எதிராக தாரமங்கலம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது செல்வாக்கைக் கண்டு வியந்த எம்.ஜி.ஆர், அவரை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். மீண்டும் அதே தொகுதியில் 1984 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
செம்மலையின் அரசியல் பயணம்
அதன் பின்னர் 2001, 2016 ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்றத்திற்கும், 2009 ஆம் ஆண்டு சேலம் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் மேட்டூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வான அவர், தற்காலிக சபாநாயகர்யாகவும் பணியாற்றினார். சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
அதிமுகவில் இருந்து விலகல்
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களின் பொழுது அவர் ஓபிஎஸ் அணியில் இணைந்து பணியாற்றினார். ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்த போது, அவர் மீண்டும் அதிமுகவில் செயல்படத் தொடங்கினர். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டப் பின்னர் அவர் இபிஎஸ் தலைமையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்த அவர், மே மாதம் 18ஆம் தேதி அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
செம்மலை விலகளுக்கான காரணம் என்ன?
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நடந்து வரும் நிகழ்வுகள் தமக்கு வேதனை அளிப்பதாக கூறி கட்சியில் இருந்து விலகினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த கட்சியை எப்படி பாதுகாத்தார் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அந்த அதிமுக தற்போது பலவீனமாகிவிட்டது, அதை வலுப்படுத்த கட்சியில் யாரும் இல்லை. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அவருடன் பயணித்தவன், இன்று இந்த இயக்கத்தில் இருந்து வேதனையோடும் கனத்த இதயத்தோடும் விலகுகிறேன். கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா? மனசு நோகுதையா.! என்று விலகலுக்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டு இருந்தார்.
தவெகவில் இணையும் செம்மலை
இனி அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்த அவர், இன்று தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சேலத்தில் அமைச்சர் பார்த்திபனை நேரில் சந்தித்ததன் மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இன்று தாராபுரம் இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் விஜயின் பிரச்சார கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், செம்மலை முதலமைச்சர் விஜய் முன்பு கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தலைமை போடும் கணக்கு
செம்மலைக்கு தவெகவில் இணைவதில் சிறிதும் உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் செம்மலையின் மகன் தவெகவில் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் தவெக தலைமை, செம்மலையின் மகனை மட்டும் கட்சியில் இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. செம்மலையோடு வந்தால், “எம்.ஜி.ஆர் காலத்து அதிமுககாரர், விஜயை இன்னொரு எம்.ஜி.ஆராக பார்க்கிறார்” என்கிற இமேஜை உண்டாக்கலாம் என்று தவெக தலைமை கணக்கு போடுகிறது. மறுபுறம் தவெகவில் செம்மலை இணைவது மகனின் விருப்பத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும் மட்டுமே இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
கொங்கு மண்டல தலைவர்களை கவரும் தவெக
மேலும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற வேண்டுமென முனைப்பு காட்டி வருகிறது. இந்த சமயத்தில் கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுககாரரான செம்மலை, தவெகவில் இணைந்தால், சமூக ரீதியான வாக்குகளும் தங்களுக்கு சாதகமாக மாறும் என்று தவெக தலைமை கணக்கு போடுகிறது. கொங்கு மண்டலத்திலிருந்து தவெகவை நோக்கி நகரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வரிசையில் செம்மலையின் இணைப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.