Times of Puducherry
தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சமூக பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO-வில் கட்டாயமாகச் சேர்வதற்கான மாதச் சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய மாற்றமானது செப்டம்பர் 17, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
யாருக்கெல்லாம் நன்மை?
இதுவரை அடிப்படை சம்பளம் ரூ.15,000-க்கு மேல் இருந்ததால் EPF கட்டாய வரம்பிற்கு வெளியே இருந்த பல ஊழியர்கள், இனி இந்த அமைப்பின்கீழ் கொண்டுவரப்படுவார்கள். ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் சுமார் 51 லட்சம் புதிய ஊழியர்கள் இந்த முடிவால் நேரடியாகப் பலனடைவார்கள்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு சுமார் ரூ.11,339 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கடைசியாக 2014- ல் ரூ.15,000 ஆக மாற்றப்பட்ட இந்த வரம்பு, சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகே தற்போது ரூ. 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் குறைந்தபட்ச சம்பளமே ரூ.15,000 -ஐ தாண்டிவிட்டது. இதனால் ரூ.15,000 என்ற 2014-ஆம் ஆண்டின் வரம்பு நடைமுறைக்கு ஒத்துவரவில்லை என்பதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேமிப்பு மட்டுமல்ல முப்பரிமாணச் சமூகப் பாதுகாப்பு
இந்த சம்பள வரம்பு உயர்வின் மூலம் தகுதியான ஊழியர்களுக்கு பி.எஃப் (PF) சேமிப்பு மட்டும் கிடைக்கப் போவதில்லை; மாறாக 3 முக்கிய சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைக்கின்றன.
EPF (Provident Fund): ஓய்வுகாலத்திற்கான அத்தியாவசிய சேமிப்பு நிதி.
EPS (Pension Scheme): பணி ஓய்வுக்குப் பிறகான நிலையான மாத ஓய்வூதியம்.
EDLI (Insurance Scheme): ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு.
ஊழியர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
ரூ.25,000 என்பது கட்டாயச் சேர்க்கைக்கான 'சம்பள வரம்பு' மட்டுமே தவிர, ஊழியர்களின் தற்போதைய சம்பள உயர்வுக்கான அறிவிப்பு அல்ல.
புதிதாக இத்திட்டத்தில் இணையும் ஊழியர்களுக்கு PF பிடித்தம் செய்யப்படும் என்பதால், அவர்களின் கையில் கிடைக்கும் டேக் – ஹோம் சம்பளத்தில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.
ஏற்கனவே பி.எஃப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு, அவர்களின் தற்போதைய சம்பளக் கட்டமைப்பு மற்றும் EPF விதிகளின்படியே பிடித்தம் தொடரும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.