Times of Puducherry

ஆசிய துப்பாக்கி சுடுதல்; பதக்கத்தை தட்டித் தூக்கிய இளவேனில் வாலறிவன்: பிரதமர் மோடி வாழ்த்து

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
20 Sep 2026 • 5:52 PM
Elavenil Valarivan win silver India shooting asian games 2026

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை முதல் கோலாகலமாக தொடங்கியது. 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகள் வருகிற அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளவேனில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து நமக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள். இது அவர் இன்று வென்ற இரண்டாவது பதக்கம் என்பது இந்த வெற்றியை இன்னும் சிறப்பானதாக்குகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

அன்புமணி வாழ்த்து

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இரண்டாம் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள். ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் தனிநபர் பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே இதே போட்டியின் அணி பிரிவில் இரு வீராங்கனைகளுடன் இணைந்து வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவன் ஒரே நாளில் இரண்டாம் பதக்கத்தையும் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது சாதனைப் பயணம் தொடரட்டும்” என்று கூறியிருக்கிறார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top