Times of Puducherry

எல் நினோ என்றால் என்ன? எல் நினோவின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கப்போகிறது?

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 4:26 PM
el nino impact on tamil nadu and india weather effects explained

எல் நினோவின் தாக்கம் குறித்தும், அது தமிழகம் மற்றும் இந்தியாவில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்த உள்ளது என்பது குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

எல் நினோ என்றால் என்ன?

‘எல் நினோ’ என்பது பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பு பகுதியில் நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைவதை குறிக்கும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும். ‘எல் நினோ’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘சிறிய பையன்’ அல்லது ‘குழந்தை ஏசு’ என்று பெயர். கிறிஸ்துமஸ் காலத்தில் தென் அமெரிக்காவின் பெரு, ஈக்விட்டார் கடலோரப் பகுதிகளில் இந்த ‘நீர் வெப்பமயமாதல்’ முதன்முதலில் கவனிக்கப்பட்டதால், மீனவர்கள் இந்த பெயரை வைத்தனர். 

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை உயர்வு

வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்க்காக வீசும் காற்றுகள் பலவீனமடையும் பொழுது, வெப்பமான கடல் நீர் பசுபிக் பெருங்கடலின் கிழக்கு நோக்கி நகர்கிறது. பசிபிக் பெருங்கடலின் மேலடுக்குக் காற்றானது கிழக்கிலிருந்து மேற்காக வீசி, வெதுவெதுப்பான நீரை ஆசியப் பகுதிகளை நோக்கித் தள்ளும். இந்த காற்று பலவீனமடைவதால் அல்லது திசைமாறுவதால், வெப்பமடைந்த கடல் நீர் கிழக்குப் பகுதியிலேயே தங்கிவிடும். இதனால் உலகளாவிய மழை மற்றும் பருவமழை முறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். இந்த நிகழ்வு இந்திய பெருங்கடல் மற்றும் ஆசியாவில் மாறுபட்ட வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் எல் நினோவின் தாக்கம்

எல் நினோ பாதிப்பு தீவிரமடையும் பொழுது இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை குறையும். இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை (ஜூன் – செப்டம்பர்) பொய்க்கும் அல்லது மழைப்பொழிவு கணிசமாக குறையும். இதன் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாயம் பாதிக்கப்படும். நாட்டின் பல பகுதிகளில் கோடைகாலம் வழக்கத்தை விட அதிக வெப்பத்துடனும் நீண்ட வெப்ப அலைகளுடனும் காணப்படும். மழை பற்றாக்குறையால் நெல், கரும்பு, பருத்தி போன்ற முக்கியப் பயிர்களின் மகசூல் பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை உயரக் கூடும்.

தமிழகத்தில் எல் நினோவின் தாக்கம்

இந்தியாவின் பல பகுதிகளில் எல் நினோ கடுமையான வறட்சியைக் கொண்டிருந்தாலும் தமிழகத்தின் இதன் தாக்கம் வித்யாசமாக இருக்கப் போகிறது. அதாவது அக்டோபர் – டிசம்பர் காலங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையில் தாக்கம் அதிகமாக உள்ளது. எல் நினோ காலங்களில் தமிழகத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக கூடும். வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இதனால் சென்னை கடலூர் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. மழை பொழியும் நாட்களைத் தவிர்த்து பிற நாட்களில் இயல்பை விட அதிக வெப்பமும், புழுக்கமும் நிலவக்கூடும்.

சுருக்கமாக

வானிலை நிபுணர்களின் கருத்துப்படி எல் நினோ இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு வறட்சியையும், வெப்பத்தையும் கொடுத்தாலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை மூலம் அதிகம் மழையையும், வெள்ள அபாயத்தையும் கொண்டுவரக்கூடியதாக உள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top